நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.
நேசபிரபு வெளியிட்ட ஒருசில செய்திகளின் எதிரொலியாக இவரை ஒரு கும்பல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பதை தெளிவாக உணர்ந்த நேசபிரபு, தொடர்ந்து போலீசாருக்கு அதை நேரடியாக தெரிவித்தும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் வந்துள்ளார்.
ஆனால் போலீசாரின் மெத்தனமான அணுகுமுறையில், புதன்கிழமை (24-01-2023) இரவு அவரது வீட்டின் அருகிலேயே சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
அவரை கொலை செய்யும் நோக்கத்தில் வந்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக வெட்டி நிலைகுலைய செய்து விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறது. அவர் தற்போது கோவை கங்கா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் முடிந்த பிறகு போலீஸார் சாவகாசமாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பொதுமக்களுக்கும், அரசாங்கத்துக்கும் பாலமாக பணியாற் றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. நேசபிரபுவுக்கு நடந்த சம்பவம் சமீபத்திய உதாரணம்.
சக செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தை யும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து நம்பிக்கையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முன்கூட்டியே தனக்கு ஆபத்து இருப்பதை தெரிவித்தும், அதை அலட்சியமாக அணுகிய காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய போலீஸாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என கருதுவதை தவிர்க்க முடியவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீஸாரிடமும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அவசர உதவிக்காக அணுகும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலை ஒற்றை சம்பவமாக கருதாமல், ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சி என்பதை உணர்ந்து, பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை அரசு விரைந்து கொண்டு வர வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.