Close
நவம்பர் 22, 2024 6:19 காலை

பாடகர் எஸ்பிபி… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பாடும் நிலா பாலு பிறந்த நாள் நினைவலைகள்

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்… என்ற வரிகளுக்கு உரித்தானவர் ஒருவர் உண்டென்றால்  அது எஸ்பிபி மட்டும்தான்.

இசைத்துறையில் ஜாம்பவான்… ஆறு முறை பெற்ற தேசிய விருதுகள் உட்பட எஸ்பிபி பெற்ற விருதுகள் எண்ணிக்கையில் அடங்கா.‌ 40,000 பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவானவர் ரசிகர்கள் மனம் கவர்ந்த எஸ்பிபி.இவை எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மனம் கவர்ந்த, யார் மனதையும் புண்படுத்தாத மாபெரும் கலைஞன்.

முதியோர்களையும், துறையில் உள்ள அனுபவஸ்தர்களையும் எப்போதும் மதித்து அவர்களின் ஆசிகளைப் பெற்ற நல்ல மனிதர். சினிமா துறையில் இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இசையில் பாடல்கள் பாடி, அவர்களை ஊக்கப் படுத்தும் பெரிய மனம் படைத்தவர்.

சினிமாத் துறைக்குப் புதிதாக பாட வருகின்ற அடுத்த / இளைய தலைமுறையினரைத் திறந்த மனதுடன் வரவேற்று, அவர்களையும் ஊக்கப்படுத்தும் குணம் கொண்ட நல்ல பண்பாளர்.

தான் கலந்து கொள்ளும் எல்லாத் தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும், குழந்தைகளையும், சிறுவர் சிறுமிகளையும் ஊக்குவித்து, தான் பாடிய பாடல்களை அவர்கள் முன் அழகாகப் பாடி, எப்படி ரசிக்கும் படியாக பாடலைப் பாட வேண்டும் என அன்போடு அறிவுரை வழங்குவார், குழந்தை மனது கொண்ட பாலு.

பல சமயங்களில் வண்டியை சாவி போட்டு உசுப்புமுன், என் கை அனிச்சையாக சிடி பிளேயரை ஆன் செய்து விடுகிறது.
பல மணி நேர வாகன நெரிசலில் சிக்கினாலும் பாலுவின் தயவில் எரிச்சலடையாமல் வண்டியோட்டியது உண்டு.

டீக்கடை மாஸ்டர், சலூனில் முடி திருத்துபவர், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இப்படி பல சாமான்யர்கள் பாலா பாடிய பாடல் வரிகளை நாக்கு நுனியில்வைத்திருக்கிறார்கள். பிஜிஎம் கூட சில டிரைவர்கள் வாயிலேயே வாசித்து விடுவார்கள்.

பயணிக்கும் போது பார்த்திருக்கிறேன்.நீங்களும் நானும் கூட இதை நம்மையறியாமால் வாகனம் ஓட்டும் போது செய்திருப் போம் தன்னிச்சையாக..நான் நீங்கள் உட்பட இவர்களுக்கும் அடானா ராகத்துக்கும் சஹானா ராகத்துக்கும் வித்தியாசம் தெரியாது தான். ஆனால் மனதார ரசிக்க தெரியும். காரணம் பாலு..

போனா போகுதுன்னு சில கந்தர்வர்கள் இந்த பூவுலகில் அவதரித்து, தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி விட்டு மீண்டும் தேவலோகம் சென்று விடுவார்கள். பாலுவும் ஒரு கந்தர்வர். எளிய மக்களின் துயரை, வலியை, பிணியை, மறக்கடிக்க செய்யும் ஒரு கந்தர்வர்.

பாடுவதற்கென்றே பிறந்தவர் பாலு சலிக்காமல் பாடினார், அவரது வாழ்க்கையையும் பாடலையும் பிரித்து பார்க்க முடியாது. வாழும் போதே நிறைவான வாழ்வை வாழ்ந்து விட்டார்.நம்மை விட்டு பிரிந்தாலும் பாடலாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் பாலு… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..உண்மை தான்..

>>>இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋<<<

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top