இந்த மார்கழி மாதம் பனி பொழியும் இரவில் அமைதியாக கேட்டுப்பாருங்கள். அதன் அருமை புரியும்.
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’ என்ற பாடலை வாலி குழந்தையும் தெய்வமும் என்ற படத்திற்காக எழுதியுள்ளார். எம்எஸ்.விஸ்வநாதனின் இசையில் டிஎம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் அருமையான காதல் மெலடியாகப் பாடியுள்ளனர்.
தன்னை மறந்து இரவுப்பொழுதில் இந்தப் பாடலை ரசித்துக் கேட்கலாம். காதில் தேன் வந்து பாய்வது போல இருக்கும். காதலன், காதலியின் உரையாடல்தான். அதில் எவ்வளவு நயத்தைக் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் என்று பாருங்கள்.
இது மார்கழி மாத குளிர் காலம். காலையில் எழுந்திருப்பதே ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும். இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுவோம். யாராவது எழுப்பினால் எரிந்து விழுவோம். அந்த வகையில் இந்தப் பாடலிலும் ஒரு கருத்து வருகிறது. பாருங்கள்.
காதலன் காதலியிடம் சொல்கிறான். அன்புள்ள மானைப் போன்ற கண்களை உடையவளே, நான் உனக்கு ஆசை ஆசையாக ஒரு கடிதம் எழுதுகிறேன். என்னன்னா அது உயிர் என்னோட உயிரைக் காதலாக்கி அதை கவிதையாக வடித்துள்ளேன்.
அதற்கு காதலி சொல்கிறாள். அன்புக்குரிய என் மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் என்கிறாய். ஆனால் நான் அப்படி அல்ல. அதை நான் உன்னைப்போல வெறும் கைகளால் எழுதவில்லை. இரு கண்களால் எழுதி வந்துள்ளேன். படித்துப் பார் என்று கெத்தாக சொல்கிறாள்.
அவளது செல்லமான இந்தத் திமிரை அடக்க வேண்டியது காதலனின் கடமை அல்லவா. அவன் என்ன சொல்கிறான் பாருங்கள். நலம் நலம்தானா என் முல்லை மலரே, சுகம் சுகம்தானா என் முத்துச்சுடரே என்று வழக்கம்போல குசலம் விசாரிக்கிறான். அத்தோடு நிறுத்தவில்லை.
இளைய கன்னியான உன் இடை மெலிந்து போனதே, அது பத்தாதுன்னு நடையும் தளர்ந்துபோன மாதிரி உள்ளதே, வண்ணப் பூங்கொடியாக அதாவது ஒல்லியான தேகம் கொண்டு இருந்தாயே… இப்போது கொப்பும், குலையுமாக வடிவத்துடன் நிற்கிறாயே, அதே சமயம் இந்த வாடைக்காற்றில் இப்படி வாடிக் கொண்டு இருக்கிறாயே… எல்லாம் யாருக்காக? உன் காதலனுக்காகத் தானே என்ற வகையில் கேட்கிறான்.
அதற்கு அவள் சொல்லும் பதில் இது. இவள் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறாள். யாரிடம் சொல்கிறோம். காதலனிடம் தானே என்று. நலம் நலம் தானே. நீ என் அருகில் இருந்தால்… சுகம் சுகம் தானே உன் நினைவு எப்போதும் என் நெஞ்சில் இருந்தால்… அதனால் தான் அப்படி இருக்கிறேன்.
அதே நேரம் நீ வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ என்று கேட்டாய். அதுதான் பெண்மை. இது கூட தெரியாதோ? வாட வைத்தது யார் நீ தானே நீ தானே… அது தானே உண்மை என்றும் சொல்லாமல் சொல்கிறாள்.
அடுத்ததாக அவளே சொல்கிறான். நான் உனக்கு ஒரு பாடம் நடத்தலாம்னு வந்தேன். ஆனால் உன் பேச்சைக் கேட்டதும் எனக்கொரு பாடத்தைத் தா என்று உன்னிடம் தான் கேட்டுள்ளேன். அதன்பிறகு காதலன் சும்மா விடுவானா, அவன் என்ன சொல்கிறான் பாருங்கள். பருவம் என்கிறதே பாடம் தானே.
அதாவது பதின்ம வயதைத் தான் அப்படி சொல்கிறான். அது பெரிய பாடம். அப்போதுதான் காதல் அரும்பும். அந்தப் பார்வை என்பது தான் பள்ளி என்கிறான். எனக்குக் காதல் பாடம் நடத்தும் பள்ளிக்கூடம் என்று சொல்லாமல் சொல்கிறான். அடுத்ததாக இருவரும் சேர்ந்து பாட ஆரம்பிக்கிறார்கள்.
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் காதலில் நேரம் போவதே தெரியாது. காலையில் பேச ஆரம்பித்தால் இரவு வந்து விடும். நிலவும் அப்போது வந்து விடும் என்று கவிஞர் நயம்பட உரைத்துள்ளார். வாலிபக்கவிஞர் அல்லவா? சொல்லவா வேண்டும்…!