Close
நவம்பர் 22, 2024 11:58 காலை

 விறுவிறுப்பான விக்ரம் … திரை விமர்சனம்..

திரை விமர்சனம்

கமல்ஹாசனின் விக்ரம்-2

 விறுவிறுப்பான விக்ரம்.. திரைப்படம்..

படத்தின் நாயகனை பற்றி பேசுவதற்கு முன், விஜய் சேதுபதியையும், ஃபர்ஹத் பாசிலையும் பேசியாக வேண்டும். ஒருவர் வில்லனாகவும், இன்னொருவர் விசாரணையாள னாகவும் படத்தின் முதல் பகுதியில், நம்மை திரையரங்கு அனுபவத்தில் திக்குமுக்காடச் செய்கின்றனர்.
இடைவேளைக்கு பிறகு கமலின் ஆட்டம் ஆரம்பமாகிறது. அனல் பறக்கும் ஆட்டம் ஒவ்வொன்றிலும் திரை, தீப்பிடித்து விடுமோ என எழுகிற அச்சம் தவிர்க்க முடியாத ஒன்று. சர்வதேச தரத்தில் தமிழ் படத்தை நகர்த்தி செல்ல வேண்டும் என்கிற அவர் கனவு இந்த படத்தில் முக்கால்வாசி நிறைவேறி விட்டது எனலாம்.

1986 -இல் வெளியான விக்ரமில் காட்சியமைப்பு, திரைக்கதை, நெறியாள்கை என அனைத்திலும் நம்மவர் தலையிட்டதாக சொல்வார்கள். இந்த படம் முழுக்க இயக்குனர் படமாகவே தெரிகிறது. பட உருவாக்கத்தில் தேவையான இடத்தில் மட்டுமே தன் ஆலோசனைகளை தந்திருப்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. அன்பே சிவத்தில் மாதவனை நடிக்க வைத்து அழகு பார்த்தது போல விஜய் சேதுபதியையும், ஃபர்ஹத் பாசிலையயும் இந்த படத்தில் சுதந்திரமாக நடிக்க விட்டிருக்கிறார்.

விக்ரம் 1 -இல் படு ஹிட்டான பாடல்கள் போல இந்த படத்தில் பத்தல பத்தல பாடல் இருக்கிறது. அது இல்லாமல் இருந்தாலும், அது ஒரு குறையாக கொள்ளப்படாது. படத்தின் போதாமையை பேச நினைத்தாலும், பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. சமூக நலன் சார்ந்து யோசிக்கிற கதையம்சம் பெரும்பாலும் நல்ல வரவேற்பை நிச்சயம் பெறும்.

போதைப் பொருள் ஒழிக்கப்பட வேண்டும், போதைப்பழக்க மற்ற தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்கிற மையக்கரு தான் படத்தின் உயிர் நாடி. அதை உயிரோட்டத் துடன் சொல்லியிருப்பது சிறப்பு. சமீபத்தில் பீஸ்ட், கேஜிஎஃப் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு, ஒப்பீட்டளவில்
பீஸ்ட் படம் 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக சொன்னார்கள். ஒரு வேளை விக்ரம் அதே நேரத்தில் வெளிவந்திருக்கும் எனில் கேஜிஎஃப்பை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் என்பது என் கணிப்பு.

கடைசியில் சில நிமிடங்களே வரும் ரோலக்ஸ் சூர்யாவின் கெட் அப் அசத்தல். உச்சத்தில் இருக்கும் நாயகர்கள், வில்லன் பாத்திரம் ஏற்கும் போது சிலரால் தான் அந்த எதிர்மறை பாத்திரத்தில் கூட உச்சத்தை தொட முடியும். சூர்யாவிற்கு அது சுபிட்சமாக அமையும் என நம்புவோமாக. அதற்கு விக்ரம் 3, வரும் வரை காத்திருக்க வேண்டும்.

உலக நாயகன் என்கிற சொல்லுக்கு, ஒட்டு மொத்தமாய் பொருந்துகிற ஒரு தமிழனால், கோலிவுட் சினிமாக்கள், இனி வரும் காலங்களில் ஹாலிவுட் படங்களுக்கான, மாதிரியாக மாறுகிற சூழலுக்கான முதல் சுழி விஸ்வரூபத்தில் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விக்ரம் படத்தை சொல்லலாம். தமிழ் சினிமாவின் சாளரம், விசாலமாக திறந்து விடப்பட்டிருக்கிறது.

படைப்பாளிகளின் கருத்தாக்கமும்,பார்வையாளிகளின் பார்வையும் ரசிகர்களின் ரசனையும், வீரியமான வீச்சிற்கு இழுத்து செல்லப்படுவதன் மூலம், தமிழ் திரை சூழல் ஆரோக்கியமானதாக இருப்பதாக ஆணித்தரமாய் அடித்து சொல்லலாம். வெகு காலமாக விசில் அடிக்காத நம்மை, விக்ரம் படம் பலமுறை அடிக்க வைத்து விடுகிறது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top