சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சென்னை குடிநீர் வழங்கல் வாரிய லாரி ஓட்டுனர் ஜெயக்குமார் (50) சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு திருமணமாகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.ஜெயக்குமார் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
திருவொற்றியூர் டி.கே.எஸ்.நகரில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் உள்ள குடிநீர் தொட்டியில் லாரியில் சனிக்கிழமை கொண்டு சென்ற குடிநீரை குழாய் மூலம் நிரப்பிக் கொண்டி ருந்துள்ளார்.
அப்போது தொட்டியில் இருக்கும் தண்ணீரின் அளவை பார்ப்பதற்காக குனிந்து பார்த்தபோது ஜெயக்குமாரின் அலைபேசி தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது. உடனே அலைபேசியை எடுப்பதற்காக தண்ணீர் தொட்டியில் இறங்கிய ஜெயக்குமார் குளோரின் கலந்த தண்ணீரில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தோர் ஜெயக்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜெயக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து போய்விட்டதாக தெரிவி்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மருத்துவமனைக்கு வந்து ஜெயக்குமாரின் சடலத்தைத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாத்தாங்காடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.