Close
நவம்பர் 22, 2024 12:39 காலை

போதை மாத்திரை விற்ற பட்டதாரி  இளைஞர் உள்பட 2 பேர்  கைது

ஈரோடு

ஈரோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

ஈரோட்டில் போதை மாத்திரைகளை விற்ற பட்டதாரி  இளைஞர் உள்பட 2 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு  ரகசிய  தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர்  புவனேஸ்வரன் தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரில் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

இரண்டு இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்துப்பிடித்து விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடம் 43 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் தமிழரசன் (24), முனியப்பன் மகன் ரஞ்சித் (23) என்பதும் வலியை போக்குவதற்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதை மாத்திரைகள் என்ற பெயரால் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் தமிழரசன், பி.சி.ஏ பட்டதாரி என்பதும், மற்றொருவரான ரஞ்சித் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தமிழ்மணி டாட் நியூஸ்  செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழரசனும் ரஞ்சித்தும் ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் எந்த ஆலோசனை குறிப்புச் சீட்டும் இல்லாமல் வாங்கி விற்பனை செய்வதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர்.10 வலி நிவாரண மாத்திரைகள் அடங்கிய அட்டையை ரூ 500 கொடுத்து வாங்கி அதை ரூ.2000க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

அரசின் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக இதுபோன்று வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் எனக்கூறி விற்பனை செய்வதால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 43 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதை மாத்திரைகளை அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

#செய்தி: ஈரோடு  மு. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top