Close
நவம்பர் 15, 2024 1:12 காலை

சென்னை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டருக்கு கத்தி குத்து

கத்தி குத்தில் காயம் அடைந்த டாக்டர் பாலாஜி.

சென்னையில் பணியில் இருந்த அரசு மருத்துவமனை டாக்டர் கத்தியால் குத்தப்பட்டார். அவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை கிண்டியில் தமிழக அரசின் கலைஞர் நூற்றாண்டு  அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவனையில் இன்று காலை புற்று நோய் பிரிவில் டாக்டர் பாலாஜி என்பவர் பணியில் இருந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த நான்கு பேர் சேர்ந்து டாக்டர் பாலாஜியை  கத்தியால் குத்தினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அங்கு அவருக்கு முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள் நான்கு பேரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் தாயார் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் தான் இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில்  அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியில் இருந்த அரசு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடர் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்திலும் போராட்டம் நடந்தது. இந்த சூழலில் தான் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் புகுந்த நபர்கள் பணியில் இருந்த டாக்டரை கத்தியால் குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தமிழகத்திலும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையையே ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என டாக்டர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top