கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், மாயனூர் காவல் நிலைய சரகம் சேங்கல், மேல பண்ணைகளத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சுப்புரெத்தினம் ஆகிய இருவரும் கடந்த 25.10.2024 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி குளித்தலை உட்கோட்ட டிஎஸ்பி. செந்தில்குமார் மேற்பார்வையில் மாயனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களின் அலைபேசி எண்களை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதன் மூலமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது 1. விக்கி @ விக்னேஸ்வரன், சிவகங்கை மாவட்டம், 2. தினேஷ் வேலன், சிவகங்கை மாவட்டம், 3. அசோக் என்கிற முத்துப்பாண்டி, சிவகங்கை மாவட்டம், 4. வெங்கடேஷ், பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டம், 5. விக்கி என்கிற விக்னேஸ்வரன், பல்லடம், திருப்பூர் மாவட்டம், 6. அருண்குமார், கரூர் மாவட்டம் ஆகியோர் என கண்டுபிடித்தனர். மேற்படி அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வழக்கின் சொத்து கைப்பற்றப்பட்டும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார்கள், இரு சக்கர வாகனம் மற்றும் அரிவாள் கைப்பற்றப்பட்டு 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மீது சிவகங்கை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த குற்றப்பிரிவு தனிப்படையினரை கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார். மேலும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.