நாமக்கல் :
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாபாளையம் தாலுகா, பள்ளிபாளையம் பெரியார் நகர், 7 வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35), தறி நூல் வியாபாரி. அவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி, இரவு 11 மணிக்கு 9ம் வகுப்பு படித்த, 14 வயது மாணவியை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து, அவரது பெற்றோர் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, நாமக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு, 3 பிரிவுகளில், 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை, ஏககாலத்தில் மொத்தம் 20 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்று அங்கு அடைக்கப்பட்டார்.