ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை கல்வித்துறை அமைச்சர் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட துவக்க விழா புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” திட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில்,
எல்லோருக்கும் எல்லாமும் போய் சேர வேண்டும் என்கிற நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் புத்தகங்களை வெறுமனே மனப்பாடம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு அறிவியல் கூற்றுகளும் எவ்வாறு தமது வாழ்வில் தொடர்புடையது என்பதை புரிந்து படிப்பதற்கு இதுபோன்ற திட்டங்கள் பலனளிக்கும்.
குறிப்பாக புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 43,000 அறிவியல் கண்டுபிடிப்புகள் நடக்கின்றன. அவற்றுக்கு அவர்கள் காப்புரிமை பெறுவதில் முன்னிலை வகிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 2000 அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே நடைபெறுகின்றன. அவற்றுக்கு காப்புரிமை பெறுவதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். எனவே, மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் அறிவியல் அறிவும் அறிவியல் கண்டு பிடிப்புகள் போய்ச்சேர வேண்டும். நமது முதல்வரின் விருப்பமாகும். முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பணியாற்ற வேண்டும்.
இந்த திட்டம் சென்னை போன்ற நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் பயனளிப்பதோடு நின்று விடக்கூடாது என்று சென்னையில் நடந்த இத்திட்டத்தின் தொடக்க விழாவில் முதலமைச்சர் கூறினார்.
சென்னைக்கு அடுத்தபடியாக பூம்புகாரிலும் மூன்றாவதாக தற்போது புதுக்கோட்டையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவு படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..
பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் என்னென்ன கனவு கண்டாரோ, என்னென்ன பரிந்துரைத்தாரோ அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக முதல்வர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை அறிவு பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களில் அறிவு சார் பொருள்கள் பொதுமக்களுக்கு சென்றடைய இணைத்து செயல்பட தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இத்திட்டத்தை புதுக்கோட்டையில் தொடங்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிப்பாக இந்த திட்டம் மாணவர்களிடத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.
நிகழ்வில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர். சௌமியா சாமிநாதன் காணொலி வாயிலாக உரைநிகழ்த்தினார்.
அப்போது, இந்த திட்டம் தனது தந்தை பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் கனவு திட்டமாகும். அவருக்கு பொதுவாக குழந்தைகள் மீது அதீத அன்பு உண்டு. அனைத்து குழந்தைக ளுக்கும் மிகுந்த திறமையும் ஆற்றலும் இருக்கிறது.
.ஆனால் அவர்களுக்கு அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்காததால் திறமை வெளிப்படுவதில்லை. அத்தகைய நிலையை மாற்றி உரிய வாய்ப்பை வழங்கும் ஒரு திட்டமாக இந்த திட்டம் இருக்க வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் அவரின் அந்த கனவை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கில் நவீன தகவல் தொழில் நுட்ப கட்டமைப்புகளை பயன்படுத்தி அதிகப் படியான மாணவ மாணவர்களின் பயன்பெற அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு செயல்படுத்த விரும்புகிறோம்.
நவீன கணினியை பயன்படுத்தி வழங்கப்படும் பயிற்சிகளில் ஏராளமான விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர் மற்றும் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள் என்றார் அவர்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா பேசும்போது, ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற இந்த திட்டத்தின் பெயர் மிகவும் அருமையாக மாணவர்களை கவரும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பு மாணவர்க ளையும் ஊக்கப்படுத்தி அவர்களின் அறிவியல் அறிவும் மேம்பட செய்கிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் 5 ஸ்டார் நிதி குழுமம் தலைமை நிதி அலுவலர் ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், அவர் தனது உரையில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம். எங்களால் முடிந்த சிறு உதவியை இத்திட்டத்திற்கு வழங்கிய தில் பெருமைகொள்கிறோம். தொடர்ந்து ஒத்துழைப்பை நல்குவோம் என்றார்.
இதில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன உயிரி தொழில் நுட்பத்துறை இயக்குநர் வி.ஆர்.பிரபாவதி பங்கேற்று “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” திட்டத்தைப்பற்றி விளக்கிப் பேசினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜ.சா. மெர்சி ரம்யா, மூத்த வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன், முதன்மை கல்வி அலுவலர் எம். மஞ்சுளா, தேசிய நல்லாசிரியர் விருதாளர், தமிழ்ச்செம்மல் கவிஞர். தங்கம் மூர்த்தி, ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் எம். பெரியசாமி, தேசிய இணைய கல்விக் கழக பிரதிநிதி ஜி.எஸ் தனபதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எம்.வீரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் ஜி.என்.ஹரிஹரன் தனது வரவேற்புரையில் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளைக் குறிப்பிட்டார். நிறைவாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் நன்றி கூறினார்.