Close
மே 10, 2024 8:48 காலை

விருதுநகரில் கரிசல் இலக்கிய திருவிழா – 2023

விருதுநகர்

விருதுநகரில் நடைபெற்ற கரிசல் இலக்கிய திருவிழா

தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்தபூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு வாழும் மனிதர்களைக் கதாமாந்தர்களாகவும் கொண்டு, வெந்து தணியும் அந்த கந்தக பூமியில் அவர்களின்பாடுகளை, வாழ்வியலை, வலிகளை, சந்தோஷத்தை அந்த மண்ணிற்கே உரிய வட்டாரமொழிநடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல்இலக்கியம்.

கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச்சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தைமாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையேகொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் நோக்கமாகக்கொண்டு, இந்த கரிசல் இலக்கியத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (08.12.2023) நடைபெற்ற கரிசல் இலக்கிய திருவிழா-2023 நிகழ்வுகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்   தொடக்கி வைத்து   கூறியதாவது:

தமிழ்நாட்டின் திசைகள் தோறும், அந்தந்த பகுதி வட்டார வழக்குகளில், அந்தப்பகுதிகளின் பண்பாட்டில் இருக்கும் உணர்வுகளை எல்லாம் காலம் காலமாக இலக்கிய வடிவங்களில் வழங்கப்பட்டு வருவதை நெறிப்படுத்தியும், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும், தமிழ்நாடு முழுவதும் பொருனை
இலக்கியத் திருவிழா, வைகை இலக்கியத் திருவிழா, சிறுவாணி இலக்கியத் திருவிழா,தென்பெண்ணை இலக்கிய திருவிழா, சென்னை இலக்கியத் திருவிழா என  இலக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் வடக்கே குண்டாயிருப்புபாயக் கூடிய திருமங்கலத்தின் தெற்குப் பகுதியில் இருந்து தாமிரபரணி பாயும் தெற்கத்தி சீமையின் கங்கைகொண்டா னின் வடக்கு பகுதியில் இருந்து, இடைப்பட்ட இடங்களில் குறுக்கிலும், நெடுக்கிலும் விரிந்து கிடக்கின்ற பூமி தான் கரிசல் மண்ணுக்கான புவியியல்எல்லை.

இந்த பகுதிகளில் கடந்த 300-400 ஆண்டுகளாக நமக்கு ஆவணங்களின்படி விவசாயம் செழித்து வளர்ந்து கொண்டிருக் கின்றது. இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை, பாடுகளை இந்த பகுதிக்கே உரிய பண்பாட்டு செல்வாக்கை, நமது மண்ணைச் சார்ந்த எழுத்தாளர்கள் மிககாத்திரமான நடையில், இந்த மண்ணின் பசியை, துக்கத்தை ஆண்களை விட அதிகமாகஉழைக்கும் பெண்களின் உழைப்பை தங்களின் எழுத்துக்கள் வழியாக பதிவுசெய்திருக்கிறார்கள்.

வீட்டிலும் காட்டிலும் அவர்களினுடைய உழைப்பு என்பது கரிசல்மண்ணின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்று ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும்குறிப்பிடுகிறார்கள்.இந்த நிகழ்வை ஒட்டி மூன்று நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஒன்றுகரிசல் இலக்கியத்தை பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இந்த மண்ணின் தொடர்ச்சியானபண்பாட்டு மாற்றத்தை மிக காத்திரமாக ஆய்வு செய்து, ஒரு ஆய்வுக் கோவையை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இரண்டாவது தற்போது வாழும் படைப்பாளர்கள், இந்த மண்ணில் இருந்து பல சாகித்யஅகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், இந்த மண்ணில் இருந்து உருவாகி இருக்கிறார்கள்.பல சாகித்ய அகாடமி எழுத்தாளர்கள், இன்னும் விருது பெற இருக்கும் எழுத்தாளர்கள்,விருதுகளை வாங்காமல் இருக்கும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என அந்த பட்டியல் மிகநீளமானது.

மூன்றாவதாக எழுத்தாளர்களுடைய சமகால படைப்புகளை தொகுத்து ஒரு நூலாகவும்,கால வரிசைப்படி, இந்த மண்ணை புரிந்து கொள்வதற்கு சிறுகதைகளின் வழியாக எளிதாக வாசித்து புரிந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினர்; இந்த மண்ணில் பிறக்கும் மாணவச்செல்வங்கள், இளைஞர் கள் தெரிந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகள் தொகுப்பையும் இந்த இலக்கிய திருவிழா வாயிலாக கொண்டு வந்திருக்கின்றோம்.

இந்த மூன்று ஆவணங்களும் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில்வழங்கப்படக்கூடிய கரிசல் இலக்கியத்தின் தொகுப்பாகவும், கால கண்ணாடியாகவும் அடுத்தநூற்றாண்டுகளில் நம் பண்பாடு எப்படி பயணப்பட வேண்டும்.

இந்த இலக்கியம் செல்வதற்கானநெறியையும், இந்த நூல்கள் ஒரு சில அங்குலங்களாவது வழிகாட்டும் என்பது தான் இந்த கரிசல் இலக்கிய விழாவின் நோக்கம்  நோக்கம் என்றார் ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன்.

முன்னதாக கரிசல் இலக்கிய படைப்பாளிகளின் குறிப்புகள் அடங்கிய புகைப்படகண்காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திறந்து வைத்தார்.

விருதுநகர்
விருதுநகரில் நடைபெற்ற கரிசல் இலக்கிய விழா கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் புக்கர் விருதுக்கான நீளப்பட்டியலில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளர், ஜே.சி.பி இலக்கிய இலக்கிய விருதாளர் பெருமாள் முருகன் சிறப்புரையாற்றினார்.

சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் காணொலி காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். பின்னர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்  தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஜா.மாதவராஜ்  கரிசல் வட்டார சிறுகதைகள் என்ற தலைப்பிலும், முனைவர் நா.சுலோசனா  கரிசல் படைப்புகளும்சமுதாயத் தாக்கமும் என்ற தலைப்பிலும்,

கவிஞர்  இலட்சுமிகாந்தன் கரிசல் நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சு.காமராஜ்
கரிசல் வட்டார நாவல்கள் என்ற தலைப்பிலும், எழுத்தாளர்  மணிமாதவி கரிசல் மண்ணின் பெண்கள் என்ற தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  கரிசல்: நேற்று இன்று நாளை என்ற தலைப்பிலும், பேராசிரியர் சிவகாசி மு.ராமச்சந்திரன்  சிறப்புசொற்பொழிவு ஆற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து வேரும் விழுதும் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாமா, எழுத்தாளர் அப்பணசாமி, சாகித்ய பாலபுரஸ்கார் விருதுதாளர் எழுத்தாளர் கா.உதயசங்கர்ஸ எழுத்தாளர்  எல்.அமுதா, சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் சா.தேவதாஸ் , எழுத்தாளர் மதுமிதா  ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர்(மாவட்டஊரக வளர்ச்சி முகமை) .தண்டபாணி, அரசு அலுவலர்கள், எழுத்தாளர்கள், ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top