Close
ஜூலை 7, 2024 9:46 காலை

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் இராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

சிவகங்கை

சிவகங்கை மன்னர் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் கே.இராமகிருஷ்ணனுக்கு நாளை சிவகங்கையில் பாராட்டு விழா நடைபெறும் வேளையில் அவரைப் பற்றிய அவரது மாணவரின் பதிவு உங்கள் பார்வைக்கு..

இராமநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் குண்டாத்து வீரபாண்டியன்- சங்காமிர்தம் ஆகியோர்களுக்கு மகனாக 13.12.1938 -ஆம் தேதி இராமநாதபுரத்தில் பிறந்தார்.

சிவகங்கை சீமையின் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர் ஆன பிரபல மூத்த வழக்கறிஞர் இராமச்சந்திரனார் அவர்கள் மகனும் பிரபல வழக்கறிஞரும் மாநில தேர்வாணையத்தின் (TNPSC) தலைவராகப் பணிபுரிந்த வருமான தனது தாய்மாமன் இராமசுப்பிரமணியனின் மகள் கலைச்செல்வியை மணமுடித்தார். அவருக்கு காமராஜ் பாண்டியன் மற்றும் மகேந்திரக்குமார் என இரு மகன்களும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் சிவகங்கையில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வருகிறார்கள்.

இவர் சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.  82 வயது ஆகும் இவர் தனது துணைவியாருடன் சிவகங்கையில் வசித்து வருகிறார்.

ஆங்கிலம் அந்நிய மொழியாக பயமுறுத்திக் கொண்டிருந்த கால கட்டங்களில் மிக எளிமையாக ஆங்கில இலக்கணம் நடத்தி மாணவர்களை தேர்வுகளில் வெற்றி பெற வைத்த பெருமைக்குரியவர்.

வகுப்பிற்கு தாமதமாக வரும் மாணவர்கள்,அனுமதி இன்றி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ஆகியோர்களிடம் 10 பைசா,15 பைசா அன்பாக அபராதம் விதித்து அதையும் பொறுப்பான ஒரு மாணவரை வசூல் செய்ய வைத்து அதில் சேரும் பணத்தில் தினசரி ஆங்கில நாளிழ்களை வாங்கி அதை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகம் செய்து ஆங்கில இலக்கணம் நடத்துவார்.

நான் படித்த காலங்களில் பள்ளி இறுதி அரசுத் தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்திலும் கணக்கிலும் தேர்ச்சி பெற மாட்டார்கள்.  ஆனால் இவர் ஆங்கிலத்தில் அதிக மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்து சாதனை புரிந்தார்.

சிவகங்கை நகரில் நேரு யுவகேந்திரா, ஜவஹர் சிறுவர் மன்றம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சிவகங்கை நுண்கலை மன்றம் அமைத்து கதாசிரியராக இருந்து சமூக சிந்தனையை வலியுறுத்தும் கருத்த இரவுகள், விடியலின் விரல்கள், நீதியின் கண்கள், ஒருசாலையும் இருபது வருடங்களும், ஐந்தாவது சக்கரம் போன்ற பல நாடகங்களை எழுதி அரங்கேற்றி  கலை உலகிலும்  பிரபலமாக விளங்கினார்.

மாமனார் இராமசுப்பிமணியனின்  தந்தையார் “சுயமரியாதை சுடரொளி” இராமச்சந்திரனார் பெயரில் பேரறிஞர் அண்ணா அவர்களால் திறக்கப்பட்ட அவரது சிலையும் பூங்காவும் சிவகங்கை நகரில் நீதி மன்ற வாசல் பகுதியில் அமைந்துள்ளது.

வழக்கறிஞர்  இராமச்சந்திரனார்  அக்காலத்தில் ஜாதி மறுப்புக் கொள்கைகளை கடைப்பிடிப்பவராக விளங்கினார். சிவகங்கை நீதிமன்றத்தில் உயர்ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி  வழக்கறிஞர்களுக்கு என தனித்தனியாக இருந்த குடிநீர் தண்ணீர் பானைகளை நீதிபதி முன்பு காட்டி இது எந்தச்சட்டத்தில் இருக்கிறது என்று கேள்வி கேட்டு தரையில் போட்டு   உடைத்த துணிச்சலுக்கு சொந்தக்காரர்ர் ஆவார்.

இவரது தாயார்,மறைந்த மூத்த வழக்கறிஞர் சண்முகநாதன் அவர்களின் மனைவி, வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்களின்  தாயார் ஆகிய மூவரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.

இவரது மைத்துனரான செங்குட்டுவன், சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், தமிழக தேர்வாணை யத்தின் உறுப்பினர் ஆகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு  23.12.2023 அன்று சிவகங்கை சோழபுரம் ரமணவிகாஸ் பள்ளியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

சிவகங்கை மக்களால் “இராமகிருஷ்ண வாத்தியார்” என அன்போடு அழைக்கபடு பவரும் பேரறிஞர் அண்ணா அவர்களைப் போல ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சேர புலமைப் பெற்றவருமான ஆசிரியர் இராமகிருஷ்ணன்- கலைச்செல்வி  தம்பதியர்  நீடுடி வாழ வாழ்த்துவதாக அவரது மாணவரும்சிவகங்கை வழக்கறிஞர் இரா. பிரபாகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top