கந்தர்வகோட்டை அருகே தெற்கு வாண்டான் விடுதி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அப்பபள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி பேபி ஷாலினி தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் கலந்து கொண்டு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம்,எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், காலை உணவு திட்டம்,
மாணவர்களின் வாசிப்பு பயிற்சி மேம்படுத்த தொடக்கநிலை மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊஞ்சல் சிற்றிதழும் உயர் நிலை மாணவர்களுக்கு தேன்சிட்டு, ஆசிரியர்களுக்கு கன ஆசிரியர் மாத இதழ் ,
அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கலைத் திருவிழா, வானவில் மன்றம், அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்றார் அவர்.
பள்ளி மேலாண்மை குழு கூட்ட பொருளாக பள்ளிகளை தூய்மைப்படுத்துதல், மின்சாரம் தொடர்பான சேவைகள், பள்ளி வளாகம் அருகில் போதை பொருள் பயன்பாடு தடுத்தல், கண்காணித்தல், பள்ளி செல்லா , இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறனுடைய குழந்தைகளை கண்டறிந்து கணக்கெடுப்பு பணி மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்கள் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.
பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இரண்டாம் பருவ தேர்வு என்னும் எழுத்து திட்டம் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை ஜாய்ஸி ராணி நன்றி கூறினார்.