புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் கலை அருவி இலக்கியப் பேரவை, கல்லூரி நூலகம் இணைத்து நடத்திய “வாசிப்போம். வாழ்வினை வளப்படுத்துவோம்” கருத்தரங்கமும், ஞானாலயா ஆவணப்படம் திரையிடலும் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் கு. தயாநிதி தலைமை வகித்தார். கருத்தரங்கில் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவரும், புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலாளருமான சா. விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்,வாசிப்பு ஒவ்வொரு மனிதரையும் வளப்படுத்தும். அறிவை விரிவு செய்யும் என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.
சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றியது ரஸ்கினின் Undo the lost கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற புத்தகம். 24 மணி நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியதாக சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார் காந்தி.
பின்னாளில் நீதிபதியாக உயர்ந்த, பள்ளித் தேர்வில் நேரம் வியுற்று தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த போது, மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை வாசித்து மனம் மாறி பின்னாளில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் நீதிபதி கற்பக விநாயகம்.
அப்துல்கலாம் புத்தகங்களை நண்பர்கள் என்று குறிப்பிடு கிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற தேவதைகள் என்கிறார் புத்தகங்களை கலாம். புத்தகங்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும்கூட வருவார்கள் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறார் கலாம்.
அம்பேத்காரை இந்திய அரசியலமைப்பின் தந்தையாக்கியது புத்தக வாசிப்பே. எனவேபுத்தக வாசிப்பை வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
புத்தகங்களின் ஆலயம் நூலகம். அது ஒரு அறிவாலயம். அது ஒரு “மன மருத்துவ நிலையம்” என்றான் தோரோ மன்னன். ஆலயத்தில் எல்லாப் பிரச்னைகளுக்கும் வழி பிறக்கும் என்பது போல நூலத்திலும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
சாதாரண அண்ணாத்துரையை “அறிஞர் அண்ணா”வாக மாற்றியது சென்னை கன்னிமரா நூலகம்.சாகித்ய அகாதமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி, எட்டாவதற்குமேல் பள்ளிக்கு போக முடியாத நிலையில் எனக்கு எழுத்தாற்றலை பெற்றுத் தந்தது நூலக வாசிப்புதான் என்றார்.
எனவே நூலகம் என்ற கோயிலுக்குள் தினமும் சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கை மேன்மையுறும்.புத்தக வாசிப்பை நேசியுங்கள்; வாழ்க்கை வசப்படும்.தங்கள் வாழ்நாளை புத்தக சேகரிப்புக்காகச் செலவிட்டு ஞானாலயா என்ற 120000 புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை நம் புதுக்கோட்டையில் உருவாக்கியிருக்கிறார்கள் பா.கிருஷ்ணமூர்த்தி- டோரதி கிருஷ்ணமூர்த்தி என்ற இலட்சிய தம்பதியர். புதுக்கோட்டையின் ஒரு அடையாள மாகத் திகழும் அந்த ஞான ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். வானம் வசப்படும். வாழ்க்கை வளப்படும் என்றார்.
பின்னர் ஞானாலயா நூலகம் – ஆவணப்படம் திரையிடப் பட்டது.முன்னதாக முனைவர் பி. லட்சுமி வரவேற்றார். நிறைவாக நூலகர் முனைவர் சி.ராஜாங்கம் நன்றி கூறினார்.