தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4,57,525 மாணவர்கள், 4, 52,498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தேர்வு எழுதிய 9.10 லட்சம் மாணாக்கர்களில் சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12,625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 4,105 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 1, 364 அரசுப்பளிகளும் அடங்கும்.
தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20, 691 பேரும், அறிவியலில் 5,104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் 4,428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்
மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில் 96.72 சதவிகிதம் பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாவட்ட வாரியாக முதல் 10 இடங்களில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி,விருதுநகர், ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. கடைசி இடம் வேலூர் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.