Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரியருப்பன்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியருப்பன் தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகப்பா மருதப்பா மேல்நிலைப்பள்ளிக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,  வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தார்.

பின்னர் , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். தேர்தல் காலத்தில் அளித்த வாக்கு றுதிகளை நிறைவேற்றிடும் வகையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அதில் 70 சதவிகிதம் வாக்குறுதி களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப் பேற்றவுடன் ஓராண்டுகளிலேயே நிறைவேற்றியுள்ளார். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் மக்களுக்கான அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்று, தற்போது, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.323.03 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர்  25.07.2022 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாக இருந்தாலும், அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல், நல்ல திட்டமாக இருந்தால் அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்துவார்கள் என்பதற்கு இத்திட்டம் உதாரணமாக திகழ்கிறது.

இத்திட்டம், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 67 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 37 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மொத்தம் 5,715 மாணவர்கள், 6,775 மாணவியர்கள் என ஆக மொத்தம் 12,490 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிடும் பொருட்டு,  திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகப்பா மருதப்பா மேல்நிலைப்பள்ளிக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவருக்கு வழங்கப்படும் ஒரு மிதிவண்டி தலா ரூ.5,175 மதிப்பீட்டிலும், மாணவியருக்கு வழங்கப்படும் ஒரு மிதிவண்டி தலா ரூ.4,990 மதிப்பீட்டிலும் வழங்கப்படுகிறது. அதன்படி, மொத்தம் 12,490 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் ரூ.6,33,95,925 மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது.

தற்போது 11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் விரைவில் வழங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இருந்ததில், அச்சமயம் பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. அதனை சீர்செய்தும், நிதி நெருக்கடியினை சமாளித்தும், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிது புதிதாகவும் பல திட்டங்களை அறிவிக்கபட்டு, அதன் பயன்களை மாணாக்கர்களுக்கு வழங்கி வருகிறார்கள். பெற்றோர்களின் கனவை நிறைவேற் றுகின்ற வகையில் மாணவர்கள் நல்லமுறையில் பயில வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் படிப்பு மட்டுமன்றி, செயல்வடிவமும் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களது எதிர்காலத்தினை ஒளிமயமானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் என்.கோகிலாராணி நாராயணன், பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.சண்முகவடிவேலு.

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் சி.பாலதிரிபுரசுந்தரி, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப் பாளர் எஸ்.சீத்தாலெட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், திருப்பத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் கணேசன், ப.ராஜேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top