ஜேன் டார்க் என்ற உலகைச் சுற்றி வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல்களான எஃப். எஸ். டிக்ஸ்மியூட் மற்றும் லா பஃயேத் ஆகியவை மார்ச் 6-10 வரை கொச்சியில் தங்கியுள்ளது.
ரியர் அட்மிரல் இமானுவேல் ஸ்லார்ஸ், கேப்டன் இமானுவேல் மோகார்ட் மற்றும் லெஃப்டினன்ட் கமாண்டர் கிஸ்லைன் தெலேபிளாங்க் ஆகியோர் தெற்கு கடற்படையின் தலைமைத் தளபதி ஜே. சிங்கை மார்ச் 6-ஆம் தேதி சந்தித்து, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே உள்ள கடல்சார் ஒத்துழைப்பு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தார்கள்.
தமது பயணத்தின் போது தெற்கு கடற்படைத் தலைமையின் கப்பல்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளை பிரான்ஸ் நாட்டுக் குழு நேரில் சென்று பார்வையிட்டது. பல்வேறு ரகமான பயிற்சிகள், விளையாட்டுகள் உள்ளிட்ட தொழில்முறை மற்றும் சமூகத் தொடர்பு முதலியவை ஃபிரான்ஸ் நாட்டு கப்பல்கள் வருகையின் முக்கிய அம்சங்களாகும். கப்பல்களில் பயணிக்கும் அந்நாட்டு ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களுடன் கூட்டு ராணுவப் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள்.
இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தோ- பிரான்ஸ் கடற்படை ஒத்துழைப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. பிரான்ஸ் நாட்டு கப்பல்களின் வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவுமுறை மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்தும்.