Close
செப்டம்பர் 18, 2024 12:26 காலை

அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கேரள அரசு ஊழியர்கள்

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இப்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் நன்கொடைகளை அறிவித்துள்ளனர். ஏராளமானோர் முன் வந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்குகின்றனர். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தலா 5 நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது.

முதல்வர் நிவாரண நிதிக்கு, 500 கோடி ரூபாய் திரட்ட, அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஐந்து நாட்களுக்கான சம்பளத்தை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ வழங்குவதற்கு அரசு ஊழியர்கள் சம்மதிக்க வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்திருந்தது. மொத்தம் உள்ள 5,32,207 அரசு ஊழியர்களும் 5 நாட்கள் சம்பளத்தை வழங்கினால், 500 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்பது மாநில அரசின் திட்டம்.

கேரள அரசுக்கும், வயநாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு ஊழியர்கள் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தனர். அரசு ஊழியர்களில் பாதி பேர் மட்டுமே நன்கொடை வழங்க முன்வந்தனர், ஆனால் மீதமுள்ளவர்கள் பணம் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. சம்பளத்தை வழங்க, 52 சதவீதம் அரசு ஊழியர்கள் மட்டுமே ஒப்புக்கொண்டனர். பெரும்பாலான ஊழியர்கள் 5 நாட்களை சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக, லீவு சரண்டர் பணம் வரும்போது கழித்துக்கொள்ளுங்கள் என்று கூறினர்.

எதிர்பார்த்ததை விட குறைவான ஊழியர்கள் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஒப்புதல் படிவங்களைச் சமர்ப்பிக்காதவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பணத்தைப் பிடித்தம் செய்ய வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top