பயணிக்க இருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பிரதமர் மோடி ஜார்கண்டில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரதமர் மோடி மகராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த வாரம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில் இன்று மோடி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பீகார் மாநிலத்திற்கு சென்றார்.
பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் பிரதமர் மோடி அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகரி நகருக்கு சென்றார். அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் டெல்லிக்கு செல்ல திட்டமி்ட்டு இருந்தார்.
ஆனால் அவர் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவரது பயண திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மாற்று விமானமும் உடனடியாக இல்லாததால் அவர் அங்கேயே ஒரு மணிநேரத்திற்கு்ம் மேலாக காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
விமானத்தில் உண்மையிலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது பற்றி தனி பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.