Close
ஏப்ரல் 4, 2025 10:57 காலை

விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள்

விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த விலை உயர்வால், விமான நிலையங்களில் சாப்பிடுவதையே பெரும்பாலானவார்கள்   தவிர்க்கின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் டீ, 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை மலிவு விலையில் வழங்க, பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இதன்படி, விமான நிலையங்களில் பொருளாதார மண்டல விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களில் இந்த விற்பனையகங்கள் முதலில் திறக்கப்படும்.

மற்ற கடைகளை போல் அல்லாமல், இந்த விற்பனையகங்களில் இருக்கைகள் இருக்காது. கவுன்டரில் பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொண்டு, மேஜையில் வைத்து சாப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும். அதற்கான வேலைபாடுகள் நடந்து வருகின்றன. அதை தொடர்ந்து மற்ற விமான நிலையங்களிலும் இதுபோன்ற விற்பனையகங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top