Close
டிசம்பர் 12, 2024 5:30 மணி

இனி பி. எஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கலாம்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன.

மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் 3.0 (EPFO 3.0) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இல் இருந்து எப்படி பணம் எடுக்கிறோமோ அதேபோல எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்த கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் அது மட்டும் இன்றி ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ஒரு தொகையை ஓய்வூதியமாக அவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனமான epfo செயல்பட்டு வருகிறது.

தற்போது இதில் கணக்கு வைத்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது பணத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். திருமணம், பிள்ளைகளின் கல்வி, வீடு வாங்குவது போன்ற செயல்களுக்கு விண்ணப்பம் செய்து ஆன்லைனில் இருந்து எளிதாக பணம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில் மத்திய அரசு இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் வர இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம்களில் இருந்து பெற்றுக் கொள்வது, சேமிப்பை மொத்தமாக ஓய்வூதிய தொகையாக மாற்றுவது என்பன உள்ளிட்ட மாற்றங்கள் இதில் முக்கியமானவை.

தொழிலாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ள வசதியாக தொழிலாளர் அமைச்சகம் ஏடிஎம் கார்டுகளைப் போலவே ஒரு கார்டு வழங்க இருக்கிறது. இந்த கார்டினை பயன்படுத்தி தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவையான பணத்தை எளிதாக அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும். தற்போது இருப்பதைப் போன்ற விண்ணப்பம் செய்வது, ஆவணங்களை சமர்ப்பிப்பது, அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பது ஆகியவை அனைத்தும் கைவிடப்பட இருக்கிறது.

வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது தொழிலாளர்களிடமிருந்து அதிகபட்சமாக அவர்களின் சம்பளத்தில் 12 சதவீத தொகையானது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை தொழிலாளர்கள் நினைத்தால் அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தத் திட்டத்தின் ஆவணங்கள் கூறுகின்றன.

தொழிலாளர்களுக்கு பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படும் சம்பள உச்சவரம்பும் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன தற்போது 15 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பின் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிஎஃப் தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது இது கூடிய விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top