Close
டிசம்பர் 24, 2024 2:57 காலை

வயநாட்டில் 7 ரிசார்ட்களை இடித்து அகற்ற கேரளா உத்தரவு

நிலச்சரிவு அபாயம் கொண்ட இடத்தில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற, வயநாடு துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 30 அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கேரளா அரசு எடுத்து வருகிறது.

ரிசார்ட்களில் சட்டவிரோதமாக குளங்கள், தொட்டிகள் கட்டப்பட்டு, இயற்கை நீரூற்றும் அடைக்கப்பட்டிருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது. நிலச்சரிவு ஏற்பட்டால் பள்ளத்தாக்கில் உள்ள பல குடும்பங்கள் ஆபத்தில் உள்ளனர்.

தற்போது, நென்மேனி ஊராட்சி அம்புகுத்தி மலைத்தொடரில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்கு இடிக்க, வயநாடு துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து துணை ஆட்சியர் கூறியதாவது:
அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில், ஜனவரி 8ம் தேதி கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை குறித்து நென்மேனி கிராம அலுவலர் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால், 7 ரிசார்டுகள் இடித்து தரைமட்டமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வருங்காலத்தில் சுற்றுலா விடுதிகள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடங்களை ஆய்வு செய்ய சுல்தான் பத்தேரி வட்டாட்சியர், மாவட்ட புவியியலாளர், அபாய ஆய்வாளர், மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலர், நிர்வாக பொறியாளர் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி டிசம்பர் 9 தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி 15 நாட்களுக்கு இடிக்க, வயநாடு துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை வரவேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘இந்த நடவடிக்கைக்காக நாங்கள் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறோம். உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top