என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது.
பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மருந்து விலை அதிகரிப்பு, ஏழைகளை நேரடியாக பாதிக்கும். எனவே, இதுகுறித்து விரிவான விளக்கமளிக்க வேண்டுமென ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆஸ்துமா, கிளைகோமா, தலசீமியா, காசநோய் மற்றும் மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 11 மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்காக விலை உயர்வை அறிவித்ததாக ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டித்திருப்பதால், விலை உயர்வு தாமதமாகலாம் அல்லது நிறுத்தி வைக்கப்படலாம், அல்லது குறைந்த அளவு மட்டும் விலையை உயர்த்த அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.