Close
ஜனவரி 7, 2025 7:06 மணி

வயநாடு நிலச்சரிவு அதிதீவிர பாதிப்பு: மத்திய அரசு

வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ. 2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கேரள மாநில அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடிதம் எழுதியிருந்தது.

வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்து அதிதீவிர பாதிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது கேரள அரசுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கடிதத்தில் மத்திய அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்த எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக, மாநிலங்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் பேரிடர் நிவாரண நிதியை வயநாடு மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“வயநாடு பாதிப்பை அதிதீவிர பாதிப்பாக அறிவிக்கும் முடிவை அமித் ஷா எடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இது மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு பெரிதும் உதவும். இதற்கான போதுமான நிதியையும் விரைவில் ஒதுக்கீடு செய்தால் நாங்கள் அனைவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top