சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த பாதிப்பு பதிவாகி உள்ளது. பெங்களூரில் 8 மாத குழந்தை ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது நகரத்தில் முதல் பாதிப்பு. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான பாப்டிஸ்ட் மருத்துவமனையில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், தங்கள் ஆய்வகத்தில் மாதிரி சோதனை செய்யப்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியது. ” ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து அறிக்கைகள் வந்துள்ளன, மேலும் தனியார் மருத்துவமனையின் சோதனைகளை நாங்கள் சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை” என்று சுகாதாரத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக இளம் வயது.. அதாவது 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக HMPV வைரஸ் தாக்குகிறது. சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை கொரோனா வைரஸ் போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.