பழம் பெருமையைப் பேசாமல் புதிய மாறுதல்கள் தேவை என்று எண்ணிய இளம் கவிஞர்களும், சிந்தனையாளர்களும் ஒன்று சேர்ந்து 1971 -இல் வானம்பாடி என்ற கவிதை இதழை கோவை நகரத்தில் இருந்து வெளியிட்டனர்.
ஏற்கெனவே தாமரை போன்ற இலக்கிய இதழ்களை வாசித்து வந்த பிரபஞ்சனுக்கு வானம்பாடி இதழின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அந்த இதழில் பிரபஞ்ச கவி என்ற பெயரில் கவிதைகள் எழுதினார்.
சாதி, மதம் தெரியாத பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் வானம்பாடி கவிஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டனர். அந்த வரிசையில், வைத்தியலிங்கம் என்ற தனது இயற்பெயரை பிரபஞ்சன் என மாற்றிக் கொண்டு எழுதத் தொடங்கினார்.
புதுச்சேரி வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தனது நூல்கள் வாயிலாக, பலருக்கும் விரிவாக விளக்கியவர் பிரபஞ்சன்.
நவீன கால பெண் கவிஞர்கள், கொச்சையாகவும், ஆபாசமா கவும், இலக்கியத்தரம் இன்றியும் எழுதுகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்த போது, எதைப்பற்றியும் கவலைப்படாது அதை மறுத்து, பெண்கவிஞர்களின் ஆதரவாக இயங்கியவர் பிரபஞ்சன்.
பொருளாதார விஷயத்தில், பிரபஞ்சன் பலவீனராகவே திகழ்ந்தார். பணமிருந்தால், வரைமுறையின்றி செலவிடுவார்; பணம் இல்லாவிட்டால் மிகவும் பரிதவிப்பார் என்று அவருடன் பழகியவர்கள் சொல்வதுண்டு. ஆனாலும், எவ்விதத்திலாவது அவருக்கு, பொருளாதார உதவிகள் கிடைத்தவாறு இருந்ததால், ஒருபோதும் கொடிய வறுமையில் அவர் வாடவில்லை.
எழுத்துலகில், சுமார் ஐம்பதாண்டுகால அனுபவமுள்ளவர் பிரபஞ்சன். அவருடைய கட்டுரையாகவும், சொல்நயமும், கருத்தாழமும், சுவாரஸ்யமும் பொருந்தியவை. வாசகர்களின்
சிந்தனையில் தீவிர முற்போக்குத்தனமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. இவருடைய புதினங்கள், சிறுகதை களை, விரும்பிப்படிக்கும் பலரும், இவருடைய கட்டுரைக ளைப் படிப்பதில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது.
வெளிப்படைத்தன்மை கொண்டவர். எனவே, மனதில் எதையும் மறைத்து வைத்துப் பேசும் பழக்கமில்லாதவர். இக்காரணத்தால், கோபம் வந்தாலும், அதைக் கடுமையாக வெளிப்படுத்திவிடுவார். மனதில் வன்மம் வைத்துக் கொள்வதையோ, தனக்குக் காரியமாக வேண்டுமென்பதற் காக, பெரிய மனிதர்களின் கால் பிடிக்க துணியாத தன்மான நிறைந்த இலக்கியவாதியாக இறுதிவரை இருந்துவிட்டு போனார்..
… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋