Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

நிறம் மாறாமல் தன் நிலை மாறாத சோதியே சூரியன்!

சூரியன்…

ஆதியும்
ஆகி
அண்டமும் ஆகி
நீதியை மட்டுமே
நிலையாகக்கொண்டு
நிறம் மாறாமல்
தன்
நிலை மாறாத
சோதியே
சூரியன்!

சூரியனே!
அகில உலகத்திற்கும்
ஆக்க சக்தி
அகிலத்தை இயக்கும்
அனல் சக்தி
அறிய முடியாத
அணு சக்தி
உழைக்க தூண்டும்
உந்து சக்தி
உயர்வைத் தரும்
ஊக்க சக்தி!

நெருப்புக்கும்,
நித்தம் நடக்கும்
நிகழ்வின்
பொறுப்புக்கும்
அவனே ஆதி!
கறுப்பு இல்லாத
கனல்தான்
கதிரவன் என்பதே
காலம் தரும் சேதி!!

திசைகளை
தேரில் பூட்டி
விசைகளை
வில்லாய் வலைத்து
விடியலை
கணைகளாய் விடும்
வித்தகன்,
வினைகளை
தினமும் புரியும்
வெய்யோன்
விவரங்களை
நன்கு அறியும்
விண்மணி!!

ஒளி
யுகத்தை வைத்தே
வளி யுகம் ,
கலியுகம் என்பதெல்லாம்
கதிரவனின்
பாகம்!
காலம் எப்பொழுதும்
கதிரவனின் கட்டளைப்படியே
கதவுகளை திறக்கிறது
கர்மத்தை கொடுக்கிறது!!

வெஞ்சுடரே
வெப்பம்
வெயில் மாறினால்
தட்பம்,
ஒளியாகி…..
வாழ்க்கை வழியாகிய
தொழில் நுட்பம்,
நிகழ் காலத்தையும்
நிழல் காலத்தையும்
நேர காலத்தையும்
நிர்மானிக்கும் ஞாயிறு!

வானம் பொழிவதற்கும்,
பூமி
விளைவதற்கும்,
புதுமைகள் நிகழ்வதற்கும்
புண்ணியம் நிலைப்பதற்கும்
பகலவன் அருள் வேண்டும்
எந்நாளும்
அந்த
பரம்பொருள்
துணை வேண்டும்!!

மரு.மு.பெரியசாமி
புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top