Close
செப்டம்பர் 19, 2024 7:11 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…  மாக்சிம் கார்க்கியின் நாவல் தாய்…

அலமாரியிலிருந்து

புத்தக விமர்சனம்..  மாக்சிம் கார்க்கி  எழுதிய நாவல் தாய்

 புரட்சிக்கர தொழிலாளர்களை பற்றி 1906 -இல் மாக்சிம் கார்க்கி  எழுதிய நாவல் தாய்.

தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையின் கோரமான  பக்கங்களை சித்தரிப்புடன்  தொடங்குகிறது படைப்பு.  பாவெல் மற்றும் அவரது தாயார் நிலோவ்னா விளாசோவாவின் வாழ்க்கையை  சொல்கிறது.

பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா தன் நிலையி லிருந்து எப்படி தனது மகனின் புரட்சிகர  கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள்,  அவனது சக புரட்சியாளர்களுக்கு உதவ எப்படி உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்கச் சொல்வதும், அதேசமயம் நம்மையும் அந்தத் தாயோடு பயணிக்க வைப்பதும்  இந்த நாவலின் சுவாரஸ்யம்.  தன் மகனை சோசலிசத்திற்கு அழைத்துச்சென்று,  அதற்காக உழைக்கும் ஒரு தாயின் கதையைச் சொல்கிறது.

முதலில் ஆபத்தில் மாட்டிக் கொண்ட மகனை காக்கத் துடிக்கும் தாயின் சராசரி உணர்வுகளையும், பின்னர் மகனின் புரட்சிப் பாதையிலேயே பயணிக்கும் தாயின் அசாதாரண உணர்வுகளையும் ஒரு சேர தெளிவாகப் பதிவு செய்திருக்கி றார் மாக்சிம் கார்க்கி.

நாவலின் ஒரு பகுதி பாவெலின்  வளர்ச்சியை முக்கியமாகக்
காட்டுகிறது, மறுபகுதி நிலோவ்னா மற்றும் அவரது
சுதந்திரத்தை உணரும் வளர்ச்சியின் பயணத்தைப் பற்றி,
அவளது அன்பின் பரந்த தன்மையைபற்றி, பேரரசர் ஜாருக்கு எதிராக சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பாவெல் கைது செய்யப்பட்ட பின்னர்,  புரட்சிகரப் பணியில் நிலோவ்னா பணியாற்றத் தொடங்கியது இவற்றைபேசுகிறது.

 ஜார் மன்னனின் ஆட்சியில் ரஷ்யாவின் சமூக ஏற்ற இறக்கங்களையும் தெளிவாகக் காட்டுகிறது “தாய்” நாவல்.
மனித சிந்தனையும், உழைப்பும், வெற்றி கண்ட சகல பொருட் களையும், அனைவருக்கும் சமமாக பங்கிட வேண்டும் என்பதில் உறுதியோடு நின்று, பயத்துக்குமபொறாமைக்கும், பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கு அடிமையான மக்களை, அந்த விலங்குகளை வெட்டியெறிந்து அவர்களை  வெளியில் கொணர தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த சோஷலிஸ்ட்டுகளின் கதை தான் “தாய்”.

தன் கணவனின் அடிகளுக்குப் பயந்த ஒரு பெண்ணிலிருந்து, ஒரு புரட்சிக்கர தாய் எப்படி உருவாகிறாள் என்பதை
விவரிக்கிறது. வாழ்க்கை தந்த வலி ஒரு துணிச்சலான பெண்ணாக  தன் பாதையை கடந்து, சவால்களை சந்திப்பது இவையெல்லாம் தன் மகனுக்கு  உபயோகமாக இருக்க  வேண்டும்  என்பது தான் அந்த தாயுள்ளத்தின் ஒட்டு மொத்த குறிக்கோளாக  இருக்கிறது. தன் மகன் ஒரு தலைவனாக  வும்,  சிந்தனையுடையவனாகவும்,  கண்டிப்பானவனாகவும், மரியாதைக்குரியவனாகவும் முதிர்ச்சியடைவதை அவள் கண்ணெதிரே கண்டு மகிழ்கிறாள்.

அந்த தாய் தன் மகனின்  செய்கைகளை பார்த்து பெருமை யடைகிறாள். அவள்  படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்கி றாள், பின்னர் இளம்புரட்சியாளர்களின் இலக்கை, இலட்சியத்தை புரிந்துகொள்கிறாள்.

விழிப்புணர்வு அவள் கண்களைத்  திறக்கச் செய்தது, அவளுடைய  மகன் அவளுக்கு தைரியத்தின்  அழகைக் காட்டுகிறான்.  தன் மகன் சிறைக்கு அழைத்துச்
செல்லப்படும்போது, சிறைக்கு வெளியே தன் மகனின்
நோக்கங்களை உள்வாங்கி  செயல்படுகிறாள்.

மாறுவேடத்தில்  புத்தகங்கள், துண்டுப்  பிரசுரங்களை எடுத்துக் கொண்டு  பல இடங்களுக்குசெல்கிறாள்.
அவள் தன் மகனின் மீதான அன்பை அள்ளி கொடுப்ப தோடு, அவனுடைய  லட்சியங்களுக்காக அவள் போராடுவதையும் நாம் எல்லா நேரங்களிலும் காண்கிறோம்.  தனது விழிப்புணர்வின் புதிய யோசனைகளை எங்கும் கொண்டு  செல்ல,  தன்னால் முடிந்த  அனைத்தையும் செய்கிறாள்.

ஒரு தேசத்தில் மகிழ்ச்சியான  மக்களை உருவாக்க, கதை மாந்தர்கள் பயணித்த கால் தடங்களை ஒவ்வொரு பக்கத்திலும் நாம் காணலாம்.

மாக்சிம் கார்க்கி புத்தகங்களின் அழகு என்பது ஒவ்வொரு
பக்கத்திலும் காணப்படும் செய்திகள்  அனைத்துமே வலுவான  உயிர் காக்கும் சக்தியாக உருவெடுப்பது தான். “தாய் ”  படைப்பு வெறுமனே புரட்சிகரமுழக்கங் களை கொண்ட  மேற்கோள்களுக்கான ஆதாரப் புத்தகம் மட்டுமல்ல,  தொழில்துறைக் காலனியாதிக்கத்தில் நிகழ்ந்த அடிமை வாழ்க்கையை அப்பட்டமாக விளக்கி, புரட்சி குதிரைகளை வளர்ப்பதற்கு சரியான தளம் அமைத்து அங்கிருந்து பல ஓடும்  குதிரைகளைப் பெற்றெடுக்க களம் அமைத்து கொடுத்த படைப்பாகும்.

மனிதர்களின் துன்பங்களை, கைப்பற்றி புரிந்து கொள்ளும் கார்க்கியின் அபார திறமையை நிரூபிக்கும் படைப்பு.
உன்னதமான இந்த நாவல் சோசலிசத்தைப் பற்றிய ஒரு
ஆய்வுக் கட்டுரை போன்றது ஆனால் அது சலிப்பு வராதவாறு
படைக்கப்பட்டிருக்கிறது.

விமர்சகர்: சண். சங்கர்-லண்டன்– இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top