Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

கவிதைப்பக்கம்… பருந்துதொடாத வானம்… கவிதை அகமும் முகமும்… கவிஞர்தங்கம்மூர்த்தி..

கவிதை விமர்சனம்

கவிஞர்தங்கம் மூர்த்தியில் கவிதை விமர்சனம்

பருந்து தொடாதவானம் கவிதை அகமும் முகமும் அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர் கவிஞர் தங்கம்மூர்த்தி.

புதுக்கோட்டைப் பகுதிகளில் இருப்பவர்களுக்குக் கலைகளின் மீது அதீத ஆர்வமிருக்கும். மண்ணின் பெருமைகளை மடியில் முடிந்துவைத்துக்கொண்டு கவிதைகளில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் பேரன்புடைய கவிஞர் தங்கம் மூர்த்தி. வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக நாஸ்டால்ஜிக் கவிதைகளின்பால் ஈர்ப்புடன் புதுக்கவிதைகளில் கைப்பிடித்து நவீனத்துவச் சிந்தனைகளின் வழி அகத்தையும் புறத்தையும் வரிகளாக்கியபடியே செல்கிறார்.

இவருடைய கவிதைகளுக்கென ஒரு பாணி இருக்கிறது. மரபின் சந்தங்களை உள்வாங்கி குழைத்துச் சிற்பமாக்கி மேடைகளில் முழுமையான வீச்சினைத் தருபவர்.
வானம்பாடியின் வழியில் புதுக்கவிதைகளுடன் நவீனத்தை அனுசரிக்கும் புள்ளியில் முழுமையான வேகத்துடன் இணையமுயலுபவை. சின்னஞ்சிறு ஆசைகள் தான் அனுதினமும் நம்மை வியக்கவைத்துக்கொண்டிருக்கிறன.

அந்தவகையில் குழந்தைகளைக் கொண்டாடுவதில் குழந்தையாகவே மாறிப்போய் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் பிம்பத்தைச் சிதறடிக்கச்செய்வார். குழந்தைகள் என்றாலே குதூகலம், அதுவும் திருவிழா என்றால் பிள்ளைகளுக்குத்தானே கொண்டாட்டம். திருவிழாவை அழைத்துவருகிறார்கள் குழந்தைகள் குதூகலத்துடன் துள்ளுகின்றன.

தனது கனவுப் பள்ளியில் குழந்தைகளைக் தூக்கிக்கொண்டா டுபவர். ஒரு நாளைக்கு இப்பள்ளியில் படிக்க வேண்டுமென ஆசையைச் சொன்னபோது அழைத்துச்சென்று பள்ளியைச் சுற்றிக்காட்டினார். குழந்தையாகவே மாறி முகத்தில் காட்டிய பெருமிதத்தை வரிகளில் வடிப்பதெப்படி. நிலவின் ஒளியில் உதிரும் சொற்கள் தேவதைக்கானவை அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர். மொழியின் மீதான சாத்தியங்களை எளிமையாகவும் வெகுஜன மக்களிடம் சென்றுசேரும் வகையிலும் ஆழ்ந்த தெளிவான வரிகளைச் சுரந்து கொண்டிருப்பவர்.

சிரிக்காமலே குழி விழுகிறது எங்களூர் சாலைகளுக்கு என்ற வரிகளின் மூலம் அறிமுகமானபோது யாரிந்த கவிஞரெனத் தேடிப்பிடித்துப் பல்வேறு கவிதைகளைப் படித்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எனக்குக் குறுங்கவிதைகளின் மீதான ஈர்ப்பு வருவதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். பலமுறை சிங்கப்பூர் வந்துசென்றிருக்கிறார்.

என்னுடைய முதல் நூல் வெளியீடு இவருடைய ஆசிர்வாதத் தால் சாத்தியமானது. கூடு திரும்புதல் எளிதன்று என்று சொல்லிக் கவிதைக் கரங்களால் நதியைத் தொட்டுத் திறப்பது, நதியை மூடுவதுமென அழகியலோடு படிமங்களையும் குறியீடுகளாகத் தன் வழியில் மெய்மையான படைப்புகளை உருவாக்கிவருகிறார். எத்தனையோ கவிதைகள் பிடித்திருந்தாலும் ஒருசில மட்டுமே இங்கே…

அம்மா
ஒரு சிறகையும்
அப்பா
மறு சிறகையும்
இறுகப் பிடித்துக்கொண்டு
குழந்தைக்கு
அறிமுகப்படுத்துகிறார்கள்
வானத்தை
———————
விவசாய நிலங்களில்
கல்லூரியை விதைக்கிறார்கள்
நல்ல அறுவடை

துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய்

அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகள் வருகைக்காக

———————
அப்பாவாக இருந்தால் இப்படியொரு அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்று ஏங்கவைக்குமளவுக்கு பிள்ளைகளின் மீது அளவுக்கடந்த அன்பும் கேட்டதெல்லாம் கொடுப்பார் என்பதைவிட கேளாததையும் சேர்த்தே கொடுக்கும் பண்புடையவர்களைக் காண்பது மிக அரிது.

மகிழ்ச்சியோடு கொடுப்பவர்கள் சிலர் உள்ளனர். கேட்கும் போது கொடுப்பது நல்லது. பிறர்கேட்பதற்கு முன்னே கொடுக்கும்போது ஏற்றுக்கொள்பவனை விட கொடுப்ப வருக்கே இன்பம் அதிகமென்று கலீல் ஜிப்ரான் சொல்வது போல் கொடுத்தலில் இன்பம் காண்பவர்.
எனது கவிதை உலகத்துக்கு மிக நெருக்கமாகவும் எனது அனுபவத்தின் சின்ன சின்ன இருப்புகளுக்கும் அவ்வப்போது ஒளியூட்டி சித்திரம் வரைந்து உணர்வுகளைக் குவிக்கவைப் பவர். காலத்தைத் தின்னும் கவிதைகளின் வழி உலராத அன்புக்கு அடிமையாக்கிக்கொண்டே இருங்கள்.

நன்றி:  சிங்கப்பூரிலிருந்து கவிஞர் இன்பா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top