Close
நவம்பர் 22, 2024 6:09 காலை

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பூமணியின் “அஞ்ஞாடி”

புத்தகவிமர்சனம்

பூமணியின் அஞ்ஞாடி நாவல்

எனது அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..

பூ. மாணிக்கவாசகம் என இயற்பெயருடன் 1947 -ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்த பூமணியின் படைப்பு ‘அஞ்ஞாடி‘ . 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது இந்த புதினத்திற்கு வழங்கப்பட்டது.
இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
அஞ்ஞாடி நாவல் 19 -ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள், ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.-மேலும் அந்த நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சத்தினால் அப்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை கண் முன் நிறுத்தும் விதமாக அத்தனை யதார்த்தமான பதிவு செய்துள்ளது.

கூடவே கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றை கதை நுட்பத்தோடு இந்நாவல் வெளிப்படுத்துகிறது. ஆதிதிராவிடர், வண்ணார், நாடார் சமூகங்களின் வம்ச வரலாறும் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக வரலாறும், புனைவு எழுத்தாக உருவாகி உள்ளன.

பூமணியின் படைப்புகள் பெரும்பாலும் கரிசல் காட்டு மக்களின் மூர்க்கத்தினையும் எளிய மக்களின் இயல்பையும் வெகு எளிதாக காட்சி படுத்துவதாகவே அமைந்திருக்கும். அவை தலித் இலக்கியம் என வகைப்படுத்த பட்டாலும் இதைக் கரிசல் இலக்கியம் எனும் பாங்கிலேயே நாம் அணுக வேண்டும். மொத்தத்தில் இவரது எழுத்துக்களை பலவாறாகப் புரிந்து கொள்ளலாம்.

எளியவர்களுக்கும் வலியவர்களுக்குமான போராட்டமாகவும், எளிய மக்களின் கெளரவத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவ மாகவும், ஒரு செயலை முடிப்பதற்கு ஒட்டுமொத்த குடும்பமே/ஊரே உந்துதலாக இருப்பதாகவும், போராட்ட கம்யூனிச சித்தாந்தமாகவும்.. என்கிற ரீதியில் பல வகைகளாக, வாசக னின் கூர்மையான கணிப்பும், வாசிக்கையில் காட்டும் கவனமும் தான் அடித்தட்டு மக்கள் தான் தன் படைப்புகளில் அடிநாதமாக இருக்கும் என சொல்கிற பூமணியை ஓரளவு புரிந்து கொள்ள உதவும்.

விமர்சனம்: இங்கிலாந்திலிருந்து சங்கர்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top