Close
நவம்பர் 10, 2024 4:13 காலை

தமிழகமே பேசும் அளவுக்கு  புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும்: கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள கம்பன் பெருவிழா பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார், கம்பன்கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன். உடன் செயலாளர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர்

தமிழகமே பேசும் அளவுக்கு  புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும் என  கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்  தெரிவித்தார்.

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 47 –ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 15 முதல் 24 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

இவ்விழா தொடர்பாக புதுக்கோட்டை கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  மேலும் அவர் கூறியது:  புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடைபெறும்  47 –ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் , சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கம்பன் மாமணி விருது, இலக்கிய மாமணி விருது, கம்பன் பணி வள்ளல் விருது ஆகிய விருதுகளை சான்றோர் கள் 12 பேருக்கு வழங்குகின்றனர்.

புதுக்கோட்டை நகர் மன்றத்தில்  15.7.2022 முதல் 24.7.2022 வரை , 10 நாள்கள்  நடைபெறும் கம்பன் பெருவிழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு  விழா மங்கலத்துடன் ,விருது வழங்குதல், பாராட்டு அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், தமிழிசை அரங்கம், இளையோர் மன்றம், நற்றமிழ் முற்றம், தேனுரை, பல்பணி அரங்கம், சிந்தனை அரங்கம், நாட்டிய அரங்கம், மகளிர் அரங்கம்,  சுழலும் சொல்லரங்கம்,சந்திப்பு வளையம், எழிலுரை, ஐயம் தெளிவு அரங்கம், வழக்காடு மன்றம்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் வெளியிடப்பட்ட கம்பன் பெருவிழா அழைப்பிதழ்

கட்டுரை பேச்சு ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு, தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள் பங்கேற்கும் பட்டி மன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. விழாவின் நிறைவு நாளில்  மேதகு தெலங்கானா- புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று  சிறப்புரையாற்றுகிறார்.

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவைப்பற்றி தமிழகமே பேசும் அளவுக்கு சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படும் என்றார் கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்.

நிகழ்வில், கம்பன் கழகச்செயலாளர் ரா. சம்பத்குமார், துணைத்தலைவர் எம்.ஆர்.எம். முருகப்பன், கூடுதல் செயலாளர் புதுகை ச. பாரதி, துணை பொருளாளர் கறு. ராமசாமி, விழாக்குழு உறுப்பினர் ரா. கருணாகரன், பேராசிரியர் ப. பிருந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top