Close
நவம்பர் 22, 2024 12:44 காலை

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனநல மையத்தில் சிகிச்சைபெற்று குணமடைந்த தெலங்கானா மாநில இளைஞர்

புதுக்கோட்டை

மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநில இளைஞரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பிரபுதாஸ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  முன்னிலையில் நடந்த நிகழ்வில், அவரது சகோதரருடன்  (29.08.2023) அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது.

இம்மையத்தில் ஆதரவற்று சாலைகளில் உலாவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுவ துடன் அவர்களின் குடும்பத்தினரை கண்டறிந்து மீண்டும் இணைத்து வைக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

கடந்த 19.05.2023 அன்று ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிரபுதாஸ் என்பவர் இலுப்பூர் காவல் நிலையத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு புதுக்கோட்டை டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல மையத்தில்  அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பாதுகாப்பான உறைவிடம், ஊட்டசத்துமிக்க உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டதுடன், உடனடியாக ஒருங்கிணைந்த பொது மருத்துவம் மற்றும் மனநல சிகிச்சைக்கான மதிப்பீடு செய்யப்பட்டு தேவையான அவசர சிகிச்சை வழங்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை, காச நோய் உள்ளிட்ட தொற்று நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கூடுதலாக, மனநல மருத்துவர் கார்த்திக்தெய்வநாயகம் தலைமையில், மனநல செவிலியர், உளவியலாளர், மனநல சமூக பணியாளர் கொண்ட குழுவால் அவருடைய மனநல பிணிக்கான உளவியல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதன் பயனாக, பிறர் உதவியின்றி, தன்னுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு, மையத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அக்கறையுடன் உதவி செய்யும் அளவிற்கு அவருடைய மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரபுதாஸ் தனது குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தெரிவித்தார். பின்னர் அவரது உறவினர்கள் தெலங்கான மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பது  உறுதி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  (29.08.2023) மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில், குணமடைந்த இளைஞர் பிரபுதாஸ், அவரது சகோதரர் பிரபாகர் என்பவருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் மாவட்ட மனநல திட்ட பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top