Close
நவம்பர் 22, 2024 4:33 மணி

இலக்கிய ராட்சசன் ஜெயகாந்தன் பிறந்த நாள்… நினைவலைகள்..

அயலகத்தமிழர்கள்

ஜெயகாந்தன் பிறந்த நாள் நினைவலைகள்

பேரறிவின் சிறுப்பிள்ளைத் தனங்களும், சிற்றறிவின் மேதா வித்தனங்களும் நிறைந்தமண்ணின்மைந்தர்களில்ஒருவரான ஜெயகாந்தன் பிறந்த நாள்(ஏப்-24) இன்று..

சமக்கால படைப்பின் மீதான கோபத்தில் 30 வருடங்களுக்கு மேலாக எழுதுவதை நிறுத்திய பிறகும், இருக்கும் போதும், இறந்த பிறகும் பேசப்படுகிற படைப்பாளியாக இருந்தவர். சிலர் தான் இலக்கிய உலகில் இப்படி இருந்திருக்கிறார்கள். தனது கருத்தியலை தைரியமாக அப்பட்டமாக சொன்னவர்.

சிறுகதைகள் மூலம் வெகுவாகப் பேச வைத்தவர். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்ந்த இந்த இலக்கிய முரடனின் கலை உலக, அரசியல் உலக அனுபவங்களின் தொகுப்பு அவர் எப்படியான ஆளுமை என்பதை எளிதாக சொல்லிவிடும்.

இவருடைய இலக்கிய பிரவேச காலத்தில், எழுத்தாளர்கள் மேல்தட்டுப் பழம் பஞ்சாங்கக் கதைகளையே எழுதித் தள்ளினர் என்பதால், எழுத்தில் புதுமையைப் புகுத்த எண்ணி எழுத்தாளராக முடிவெடுத்தார்.

தன்னுடைய சிந்தனைகள் சராசரி மனிதர்களுடையதை விட உயர்ந்திருப்பதாக ஒருவர் உணர்வது, தான் எழுதினால் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு நிகராகவோ அல்லது அதைவிட உயர்ந்ததாகவோ தன் எழுத்து இருக்கும் என்று ஒருவர் நம்புவது ஆகியவை தான் ஒருவர் எழுத்தாளராகக் காரணமாக இருக்கும். இத்துடன் கூட ஜெயகாந்தனுக்கு அமைந்த சூழ்நிலையும் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது.

சமூகத்தின் கடைநிலையில் இருந்த மக்களோடு நேரடியான ஒரு வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருந்தார். கீழ்த்தட்டு கம்யூனிச சித்தாங்கள் அச்சிலேறினால் புதுமைக்கு உதவும் எனக் கருதி புரட்சிக் கதைகளாகவே எழுதினார்! இது அவரின் ஆரம்பகால இலக்கியங்களில் எதிரொலித்தது.

கற்பனையே பண்ண முடியாத அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மிகுந்த தைரியத்துடன் கூறியவர். நாம் சாலையில் தினமும் பார்த்தாலும் கூட கவனிக்காமல் கடந்து செல்லும் எளியவர்களின்வாழ்க்கையே இவரின்கதைக்களம்.

இவருக்கு மனித குலத்தின் மீது இருந்த அன்பும் நம்பிக்கையும் இந்தக் கதைகளில் நிறைய வெளிப்படும். பிற்காலத்தில் இவருடைய இலக்கியங்கள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை நோக்கி திரும்பியது. பிறகு சில புதினங்கள் வாயிலாக பணக்கார மக்களின் வாழ்க்கைக்குள்ளும் பிரவேசித்தார். இவருடைய இளமைக்காலம் அரசியலோடு சேர்ந்து நகர்ந்ததால் அதையும் சேர்த்தே அவருடைய வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்.புதினம் என்கிற தலையணையின் கட்டுமானத்தை உடைத்து, குறுநாவல் என்பதைப் பிரபலமாக்கியவர் ஜெயகாந்தன்.

புதுமை செய்கின்ற ஒவ்வொரு படைப்பாளியும் மரபு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது உள்வாங்கி அதில் தேவையான மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.ராமானுஜரில் ஆரம்பித்து விவேகானந்தர், பாரதியார் என எல்லோரும் இதைத் தான் செய்திருக்கிறார்கள். இது மட்டுமே காலத்தை வெல்லும் திறமை படைத்தது என்று தோன்றுகிறது.

மொழி பெயர்ப்புக் கதைகளை நினைவுறுத்துவது போல் இவர் நடையிருந்த போதிலும் வலுவான தர்க்கமும், மிகை தவிர்த்த உணர்வுகளும், கனமான உள்ளடக்கமும், நடையின் சலிப்பை மறக்கடித்து விட்டன எனலாம்.

ஆரம்பகாலப் படைப்புகள் அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையின் பேசப்படாத பிரச்சனைகளை வெளிப்படையாக அவர்களுடைய கண்ணோட்டத்திலேயே பேசியது. அவற்றில் சில உலக இலக்கியக்கிங்களுக்கு நிகரானவை. இவரது எழுத்துகள் புதிய இலக்கியங்கள் படைபவர்களுக்குத் தூண்டுதல் அளிப்பதாக அமைந்தது என்றால் மிகையல்ல.

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top