Close
மே 14, 2024 12:13 மணி

மானியத்துடன் 15 புதிய திட்டங்கள்: புதுக்கோட்டை மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள் பயன் பெறலாம்

புதுக்கோட்டை

மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியத்துடன் புதிய திட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (GC) 40% மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமும் கூடிய பதினைந்து புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு, அரசாணை (எம்.எஸ்) எண்.60, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மீன்-4(1) நாள்:-06.07.2022-ன்படி பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2021-22 மற்றும் 2022-23ன் கீழ்

உயிர் கூழ்ம திரள் (BIO FLOC) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 அலகிற்கும், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் வெட்டுதல் மற்றும் புதியதாக கட்டப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேருக்கு ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 ஹெக்டேருக்கும், புறக்கடை/ கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 அலகிற்கும்,

நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 அலகிற்கும், ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 அலகிற்கும், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஹெக்டேருக் கும்,

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஹெக்டேருக்கும், சிறிய அளவிலான உயிர் கூழ்ம திரள் (BIO FLOC) குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 அலகிற்கும்,

மீன்குஞ்சு பொரிப்பகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.45000/- மதிப்பீட்டில் 3 அலகிற்கும், மீன்பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.45000/- மதிப்பீட்டில் 4 அலகிற்கும், கூண்டுகளில் கடல் மீன்வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 5 அலகிற்கும்,

தானியங்கி கடற்கலன் கண்காணிப்பு கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.35,000/- மதிப்பீட்டில் 25 அலகிற்கும், பாரம்பரிய நாட்டுபடகுகளுக்கு மாற்றாக 10மீ வரை மொத்த நீளம் கொண்ட கண்ணாடி நாரிழைப்படகு, இயந்திரம், வலைகள் மற்றும் குளிர்காப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 10 அலகிற்கும்,

பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் 2 அலகிற்கும், கயிறு மூலமாக கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டம் ரூ.1500/- மதிப்பீட்டில் 75 எண்ணிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற் கேற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும்). மீன்வளர்ப்பு / மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-19 ஆண்டு முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய / மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன்வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 03.05.2023-க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233/1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை. தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top