Close
நவம்பர் 21, 2024 3:40 மணி

உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 % பேர் இந்தியாவில்…!

இங்கிலாந்திலிருந்து சங்கர்

குழந்தை தொழிலாளர் நாள்

உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். நமது நாட்டில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் தோராயமான புள்ளி விவரங்கள். இதை விட கூடுதலான எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புண்டு.

பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியிலோ, விளை யாட்டுத் திடல்களிலோ இருக்க வேண்டிய நேரத்தில், இன்னும் தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலும், செங்கற் சூளை களிலும், சுரங்கங்களிலும், வீடுகளிலும், நகர குப்பை மேடு களிலும், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலோ வேலை செய்கின் றனர்.

பெரும்பாலும் ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளே இந்த அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏழைக் குடும்பத்தில் எத்தனை வேலை செய்ய தகுந்த கரங்கள் உள்ளனவோ, அவை தான் அவர்கள் வயிற்றை கழுவ உதவுகின்றன. ஒரு நாள் ஒருவர் நோயில் படுத்தால் அன்றைய நாளில் அந்த வீட்டில் அடுப்பு எரியாது.

பெற்றோரின் வறுமை, பிள்ளையைப் படிக்க வைக்க முடியாத அவலம், பிள்ளையின் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் பசியைப் போக்கும் அவலம், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் பிள்ளைகள் தம் வயதுக்கு ஒவ்வாத, பிடிக்காத வேலைகளைச் செய்து காசு சம்பாதிக்க வேண்டிய ஓர் அடிமை நிலைமை.

இவை எல்லாவற்றிற்கும் அடிநாதம் வறுமை. இந்த அவல நிலை, சுற்றியுள்ள ஏழை சமுதாயத்தில் ஒரு குடும்பத்தைக் கண்டு மற்றோர் குடும்பமும் அதை தொடர்வது வழக்கமாக உள்ளது. வேலைக்கு போவதால் பள்ளிப் படிப்பு இல்லாமலும், படிப்பு இல்லாததால் நல்ல வேலைக்கு போகிற வாய்ப்பு இல்லாமலும் ஒரு சுழற்சி தொடர்கிறது. இது ஒரு அபாயக ரமான சுழற்சி.

கல்வி உரிமையை அனைத்துக் குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளச் செய்வது வரை குழந்தை உழைப்பு குறித்த விவாதம் தொடரப்பட வேண்டும்.

குழந்தைகள் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சட்டம் கோருமாயின், அக்குழந்தை அதே நேரத்திலும் வேலையிலும் ஈடுபட முடியாது. பள்ளிநேரத்திற்குப் பின்பும் விடுமுறை நாட்களிலும் சொந்த வயல்களிலும்,வீட்டு வேலைகளிலும், விறகு சேகரிப்பதிலும், வணிகத்திலும் குழந்தைகள் உதவியாக இருப்பதற்கு தடை வேண்டிய தில்லை.

ஆனால் இவற்றில் எதுவும் குழந்தைகளின் படிப்பையோ, பாதுகாப்பையோ பாதிப்பதாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில் குழந்தை நட்சத்திரம் மற்றும் குழந்தை தொழிலாளர் இரண்டும் ஒன்றுதானே என்று கேள்வி எழுப்பப்படுகிறது. குழந்தைகள் அவர்கள் விருப்பத்தின் பேரில் சின்ன சின்ன வேலைகள் செய்வதில் தவறில்லை. நடிப்பு, ஓவியம், நடனம், சண்டை போன்றவை கலையின் கீழ் வருவதால் அதில் சிறுவர்கள் ஈடுபடுவது தவறேதும் இல்லை.

தங்கள் சிறுவயது குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதில் வேண்டுமானால் ஒரு வேளை ஒரு சில பெற்றோருக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை, ஆர்வம் இருக்கக் கூடும்.  சினிமாவில் கொடுக்கும் பணத்தின் அளவு மிகுதி என்பதால், அதில் பெற்றோரின் வறுமை என்பதை விட, வருகிற வருமானத்தை ஏன் விடவேண்டும் என்கிற எண்ணம் கூடுதலாக இருக்கக் கூடும்.

இங்கே பெற்றோரின் வறுமை என்பது ஒரு காரணமாகவே இருக்காது. குழந்தை நட்சத்திரம் பெரும்பாலும் நல்ல பள்ளியில் கல்வி பெறும். சிறு வயதிலேயே அதற்குப் பாராட்டும் புகழும் கூட வரும். அதன் சமூக ‘அந்தஸ்து’ ஒரு தொழிலாளியின் அந்தஸ்து அல்ல!

அந்த குழந்தை பெரிதாய் வளர்ந்து அது ஒரு சிறந்த நடிகராக, சினிமா தயாரிப்பாளராகவோ ஆகக் கூட வாய்ப்புண்டு. ஆனால் ஒரு பீடி சுருட்டும், பட்டாசு தயாரிக்கும் குழந்தைத் தொழிலாளி, பிற்காலத்தில் அந்த தொழிலில் ஒரு முதலாளி யாய் வர வாய்ப்பு அநேகமாக கிடையாது. ஆக இரண்டும் ஒன்றல்ல.

மதிய உணவு, உதவித்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற பல திட்டங்கள் குழந்தைகளை பள்ளியை நோக்கி ஈர்த்து உள்ளது மறுக்க முடியாதது. இருந்தாலும் நம்மால் ஏன் ஒரு முழுமையை அடைய முடியவில்லை. எல்லா குழந்தை களுக்கும் கல்வி என்ற நிலை இன்னும் ஏற்படவில் லை என்பது தான் உண்மை. அதை நம்மால் உருவாக்க முடிந்தால் நிச்சயம் குழந்தைத் தொழிலாளர் என்பது முற்றிலுமாக நீக்க கூடிய ஒன்றுதான்.

கடந்த பத்து ஆண்டுகளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஊக்கமளிப் பதாக இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை யை நாம் எச்சரிக்கையுடன் கணக்கில் கொள்ள வேண்டி யுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் உழைப்பை சகித்துக் கொள்ளும் அதிகாரவர்க்கம், குழந்தை உழைப்பு என்பது வறுமையின் தவிர்க்கமுடியாத விளைபொருள் என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது. அது தான் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்பை ஈடுப்படுத்துகிறவர்களுக்கு தரப்படுகின்ற இப்போது உள்ள தண்டனைகள் அக்குற்றத்தை தடுப்பவையாக இல்லை. சட்டத்தின் பிரிவுகள் வேலைக்கமர்த்துவர்களை தான் இலக்காக்க வேண்டும். தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

இதெல்லாம் அனைவரும் ஒரு மாற்றத்தை முன்னெடுக்க விரும்பினால் மட்டுமே நடக்கும்.

… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top