Close
ஜூலை 7, 2024 10:30 காலை

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுகிற லதா மங்கேஷ்கர் நினைவு நாளில்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

லதாமங்கேஷ்கர்

மொழி, இனம், தேசம் என எல்லா பிரிவுகளையும், பேதங்க ளையும், கடந்து, சர்வதேச அளவில், கோடிக் கணக்கான இசை ரசிகர்களை, ஆறேழு தசாப்தங்களாக, தன் காந்தக் குரலால் கட்டிப் போட்டிருந்த, இசைப் பேரரசி குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். கொரானா கொண்டு போன இன்னொரு இசைமேதை.

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராகத் திகழந்த லதா மங்கேஷ்கர், 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக் கிறார். தன் இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்க முடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் மெலடி குயின் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

உயரிய விருதான “பாரத ரத்னா“, மற்றும் பத்ம விபூஷண், தாதா சாகிப் பால்கே விருது, பிரான்ஸ் நாட்டின் உயர் விருது, தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என்று ஏராளமான கௌரவங்கள், பட்டங்கள் இவருக்கு வழங்கி அலங்கரிக்கப் பட்டதன் மூலம் , அவை இமாலய சிறப்பைப் பெற்றன.

எல்லாவற்றையும் விட, கணக்கில்லா ரசிகர்கள் மனதில் ரத்தின சிம்மாசனத்தில், இசை அரசியாய் என்றும் நிலையாய் அமர்ந்து, ஆட்சி செய்யும் அரும்புகழும், பெருமையும் தான், விண்ணை எட்டும் வியக்க வைக்கும் சிறப்பாகும்.

36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகிகளில் இவர் ஒருவராவார்; மற்றொருவர் நம் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். 1974-ம் ஆண்டு அவரின் 90வது வயதில்  இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு கௌரவித்தது.

அவரது அழகியல் பற்றி சொல்ல வேண்டுமெனில்.. பல விதமான காது வைரத்திலான தோடு அல்லது மோதிரங்கள், பெரும்பாலும் வெள்ளை வண்ணத்தில் பல நிறம் அழகான பார்டர் கொண்ட பட்டு புடவைகள் என்று தனக்கு என தனி விதத்தில் அழகு செய்து கொண்டு மிளிர்ந்தவர் லதா.

விதவிதமான கார் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். யஷ் சோப்ராவின் ‘வீர் ஜாரா’ படத்துக்கு லதா பாடல்கள் பாடியபோது அதற்கான சம்பளத்தை ஏற்கவில்லையாம். இந்தப் படம் வெளியானதும் யஷ் சோப்ரா அவருக்கு மெர்சிடிஸ் காரைப் பரிசாக அனுப்பினார். லதா தன் வாழ்வின் கடைசி நாட்கள் வரை அதே காரில் தான் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணி பாடகி. சகோதரிகள் இருவரின் ஆதிக்கம் இந்தி இசையுலகில் கொடிக்கட்டி பறந்த காலத்தில், பல இந்தி பின்னணிப் பாடகிகள் மற்றும் பாடகர்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக, குறிப்பாக வாணி ஜெயராமின் வளர்ச்சிக்கும் கூட தடையாக இருந்தனர் என்பது பலமான குற்றச்சாட்டு.

ஆனால் அதற்கு தக்க ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அபிப்பிராய பேதம் இருந்து இருக்கலாம். லதா பல பாடகர்களுடன் பாடினாலும் முகமது ரஃபியுடன் பாடிய அவரது பாடல்கள் மிகவும் பிரபலம். அறுபதுகளில் அவரது பாடல்களின் ராயல்டி குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. நான்கு ஆண்டுகளாக, இருவரும் ஒருவரையொருவர் தவிர்த்து
வந்து பின் சமரசம் ஆனார்கள்.

சுதந்திர தின விழாவில் ஒலிக்கும் “சாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் இவர். தமிழில் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த “சத்யா” படத்திற்காக இரண்டு பாடல்களை பாடினார். அதில் இவர் பாடிய ஒரு பாடல் படத்தில் இடம்பெறவில்லை. இன்னொரு பாடல் தான் எஸ்.பி பி அவர்களோடு இணைந்து பாடிய “வளையோசை கலகல கலவென” தொடங்கும் பாடல்.

தனது பாடலை கேட்போருக்கு ஆறுதலாகத் திகழ்ந்தார். அவரது குரலில் ஒரு தெய்வீகத்தன்மை இருந்தது. அவர் நம்மிடையே இல்லை இருப்பினும் தலைமுறை தலைமுறை யாக என்றும் நிலைத்து நிற்கும் பாடல்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top