Close
மே 12, 2024 9:39 மணி

எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள்: விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

அரிமளம் அருகே நெடுங்குடியில் நடைபெற்ற முகாமில் பேசுகிறார், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  தாலுகா, அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி  ஊராட்சியில்   நெல் அறுவடைக்கு பின்னர் எள்  சாகுபடி செய்வது குறித்தும், எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் நடைபெற்ற   இப்பயிற்சி முகாமுக்கு ஊராட்சித் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார்.

வேளாண் உதவி இயக்குநர் பாண்டி  முன்னிலை வகித்தார்.  வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தற்போது நெல் அறுவடை  முடிந்துள்ள நிலையில் வயலை தரிசாக போடாமல் குறைந்த நாட்களில் அதிகம் தண்ணீர் தேவையில்லாத  எள் பயிரை சாகுபடி செய்யலாம். இதற்கான பராமரிப்புச்செலவும் குறைவு.
விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

துணை இயக்குநர் ரவிச்சந்திரன் பேசுகையில், விவசாயிகளுக்குத் தேவையான தேவையான பயிற்சி, இடுபொருட்களையை  உழவன் செயலியில் பதிவு செய்து பெறலாம். விளைவித்த எள் விதைகளை நேரடியாக வியாபாரியிடம் கொடுக்காமல் மதிப்பு கூட்டி எண்ணெய் மற்றும் மிட்டாய் செய்து விற்கும் போது வருமானம் அதிகரிக்கும் என்றார்.

வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், எள் ரகங்கள்  டிஎம்வி7, எஸ்விபிஆர்1,   விஆர்ஐ 2, 3 ,4, 5 இவற் றின் சிறப்பியல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.

விதையை  டிரைக்கோ டெர்மா ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து வரிசையாக விதைக்க வேண்டும். நம் மாவட்டத்தில் எள் பயிரில் இலை பிணைக்கும் புழு காணப்படுகிறது. இவற்றைஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

வேளாண் அலுவலர் ரெங்கசாமி உழவன் செயலியின் பயன்பாடுகளை எடுத்துக் கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியக்குமார் வரவேற்றார். உதவி வேளாண் அலுவலர் ஹானஸ்ட் ராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டியன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top