Close
மே 13, 2024 2:30 மணி

திருமயம் வட்டாரத்தில் நடப்பு சம்பா நெற்பயிரில் குலைநோய் தாக்குதல்: கட்டுப்படுத்த யோசனை

புதுக்கோட்டை

நெற்பயிரில்குலை நோய் தாக்குதல் அறிகுறி

திருமயம் வட்டாரத்தில் நடப்பு சம்பா நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் தென்பட்டால் அதைக் கட்டுப்படுத்த வேளாண்துறை  யோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா வெளியிட்ட தகவல்:  நெல் நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் நெற்பயிரை குலைநோய்   தாக்குகிறது.

இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். இந்த நோய் தீவிரமாக தாக்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும்.

நேற்பயிரின் கழுத்துப்பகுதியில் இந்நோய் தாக்கும்போது கருப்பு நிறமாக மாறி கதிர் மணிகள் சுருங்கியும் கதிர்கள் உடைந்தும் தொங்கும்.குலை நோயை கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்திட வேண்டும்.

சுத்தமான நோய் தாக்குதலற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த டிரைசைக்குளோசோல் 75 டபிள்யு.பி 200 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. 200 மில்லி இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுபடுத்தலாம்.

மேலும் விவசாயிகள் தங்கள் நெல் சாகுபடி செய்துள்ள வயலில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏதுமிருந்தால் உழவன் செயலியில் உள்ள பூச்சி நோய் கண்காணிப்பு என்ற அமைப்பின் மூலம் புகைப்படங்களை எடுத்து அனுப்பி அதற்குரிய பூச்சி மேலாண்மை முறைகளை தெரிந்து பயன் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top