Close
நவம்பர் 24, 2024 12:22 காலை

தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் பகிர்வு..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர்

நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி’  என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். 

தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநர். உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியராக ஆரம்பகால வாழ்க்கையைத் தொடங்கிய பாவாணர், தமிழக அரசின் தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக உயர்ந்தவர்.

தமிழர் வரலாறு, தமிழர் திருமணம், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என அவர் தமிழினம் குறித்து எழுதிய நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை. தனித் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் தீவிரமாக வலியுறுத்திய பாவாணர், நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழை வேராகக் கொண்டவை என்பதை ‘வடமொழி வரலாறு’ என்கிற தனது படைப்பின் மூலம் விளக்கியிருக்கிறார்.

பன்மொழிப் புலவராகிய பாவாணர் வீட்டில், உலக மொழிகளில் உள்ள அனைத்து அகராதித் தொகுப்புகளும் இருந்தன. பாவாணர் தாமே முயன்று பல மொழிகளையும் கற்றார். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியினை ஆராய்ந்து அதில் ஆயிரக்கணக்கான தென் சொற்கள் விடப்பட்டு இருப்பதையும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம்
வடசொல்லென்று காட்டியிருப்பதையும் பாவாணர் சுட்டிக்காட்டினார். பல சொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்கிற பலரது கூற்றை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர்.

சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் பாவாணர். மறைமலை அடிகளின் தமிழர் மறுமலர்ச்சி சிந்தனையின் ஒரு தொடர்ச்சிதான் தேவநேய பாவாணர். இவரின் `சொற்பிறப்பியல்‘ நூலைப் பாராட்டி, முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளார் மறைமலை அடிகளார்.

தமிழ்தான் உலகிலேயே தோன்றியமுதல் செம்மொழி. மேலும் சமஸ்கிருதம் என்பது தமிழ் மொழியிலிருந்துசொற்களை எடுத்துதான் செம்மைத்தன்மை அடைந்தது என்ற ஆய்வுதான் பாவாணரின் ஆய்வில் குறிப்பிடத்தக்கது. ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர். கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்.

கோயில்களில் தமிழ் வழிபாடு முறை தான் பின்பற்றப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர்.ஆலயங்களின் மத வழிபாடு மட்டுமின்றி, பிறப்பு-இறப்பு குறித்த சம்பிரதாய முறைகளைக்கூட தமிழ்மொழியில்தான் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறியவர்.

தமிழ் சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை  ஏற்படுத்திய பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.

பிற தென்னாசிய மொழிகளுடன் ஒப்பிடுகையில், நவீன தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் இன்று வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு உள்ளது.

இந்த நிலைக்கான ஆரம்பகட்ட முயற்சியை தொடுத்தவர் பாவாணர் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு முன்பும், அவருக்கு பிறகும் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

ஒரு மொழி தனித்து மட்டுமே இயங்கி, உள்ளுக்குள்ளேயே அதன் தூய்மையைப் பேணுதல் சற்றுக் கடினம் என்பதை நாமறிவோம்.மொழிக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் ஒரு பண்பாட்டு வழங்கல் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அது திணிப்பாக/சதியாக இல்லாமல் ஒரு மெல்லிய கொடுக்கல் வாங்கலாக இருக்க வேண்டும்.

காலம் காலமாக தமிழை தங்கள் குழந்தைகளுக்கும் பிறருக்கும் சொல்லிக்கொடுத்து தமிழில் பேச, எழுத மற்றும் சிந்திக்க கற்றுத்தரும் அனைவருமே தமிழ் தொண்டு ஆற்றுபவர்கள் தாம். அதை எந்த நாளும் செய்வோம்..

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top