பொதுவாக குழந்தைகள் வளர வளர அவர்களுடைய ஆடையும் பரிணாம வளர்ச்சி அடையும். குறிப்பாக குழந்தை பருவம் என்பது வேகமான வளர்ச்சி என்பதால், நாம் ஆசை ஆசையாக வாங்கிய ஆடைகள் விரைவாக சின்னதாகி விடும். கொஞ்ச நாட்கள் வைத்து போடலாம் என அளவில் சற்று பெரியதாக வாங்கினாலும் அதுவும் பத்தாமல் போய்விடும். ஆடைகள் சின்னதாக போனாலும், பிள்ளைகள் பெரியவர்களாவது என்பது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை தான் தரும்.
தாய் தந்தையர் தங்கள் குழந்தைகள் பயன்படுத்திய பல பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம், அவர்கள் உடுத்திய ஆடைகள் உட்பட.
அனைத்தையும் பொக்கிஷமாய் சேமித்து பாதுகாக்க ஆசை என்றாலும், ஒரு சில ஆடைகளை மட்டும் தான் வைக்க முடியுமே தவிர எல்லா ஆடைகளையும் வைத்திருக்க முடியாது. வைத்து பாதுகாக்கவும் இயலாது,தூக்கி எறியவும் மனம் வராது. அதிலும் தங்கள் குழந்தைகள் பிறந்த அந்த நாளில் அணிவித்து அழகு பார்த்த முதல் உடுப்பை சில பெற்றோர்கள் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.
வளர்ந்து நம் கண் முன் இருக்கிற பிள்ளைகள், விதவிதமாய் நவீன ரக உடுப்புகளை உடுத்தினாலும்,ஒவ்வொரு பிறந்த நாளிலும், புத்தம் புது ஆடை அணிந்தாலும், மழலையாய் பிறந்த அந்த நாளில், நாம் அணிவித்த “முதல் ஆடை” எப்போதும் நமக்கு பொக்கிஷம்.
உடுப்பை புகைப்படமாக்கி சட்டத்திற்குள் வைப்பதை விட, உடுப்பையே சட்டத்திற்குள் வைத்து பாதுகாக்கலாம் என்று பல வருடங்களுக்கு முன் தோன்றியதன் விளைவு தான், இந்த நினைவு பெட்டகம். பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வாழ்வில் மறக்க முடியாத அந்த நேரத்தை எப்போதும் நினைத்து மகிழ்கிறேன்.
அந்த சின்னஞ்சிறு ஆடைக்குள் குட்டி பொம்மைகள் போல, ஒட்டிக் கிடந்த எனது இரு மகன்கள் மனக்கண் முன் மீண்டும் மீண்டும் வந்து போகிற,உணர்வுகளால் பிணைப்புற்ற நினைவுகள் எப்போதும் வரம், அவற்றை மறக்காமல் ஆசையாய் அசை போடுவது வரப்பிரசாதம்.நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்ள தவறுவதில்லை என் மனம்..
#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#