என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட மக்கள் கவிஞர்.
மொத்த வாழ்க்கை 29 ஆண்டுகளே. திரையுலக ஆட்சி 6 ஆண்டுகளே. படங்களின் வரிசை வெறும் 57. தான் வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய பணம் ஒரு லட்சத்து சொச்சம். இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு. பாடல் எழுதத் தொடங்கும் போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்று எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 29 வயதில் இறந்தார். அதற்குள்ளா கவே, அவர் 17 வகையான தொழில்களை மேற்கொண்டவர். அவை யாவும் விளிம்புநிலை தொழில்களாகவே இருந்ததால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுடன் நன்கு கலந்து பழகும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. அவர்களுடைய மையப் பிரச்னைகள் என்னவென்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது.
பொதுவுடைமைக் கட்சியில் இருந்ததால், சமூக ஏற்றத்தாழ்வுகள், தீர்வுகள் குறித்த தொலைநோக்கு சார்ந்த கண்ணோட்டமும், தீர்வுகளும், அவருக்கு நிரம்ப அமைந்தன.தவிர, பாரதிதாசனின் சீடராக இருந்ததும், சித்தர் பாடல்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததும், அவருடைய சமூக வாழ்வியல் அனுபவங் களை நன்கு மெருகேற்றிக் கொள்ள உதவின.
திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே, நாடகங்களுக்கும், பத்திரிகை களுக்கும் சமூக விழிப்புணர்வு−பொறுப்புணர்வு சார்ந்த பாடல்களை எழுதி, மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தார். ஆக அனுபவமும், தனிப்பட்ட வாசிப்பறிவும், நல்லறிஞர்களுடைய சேர்க்கையும், பட்டுக்கோட்டை யாருக்கு, இளம் வயதிலேயே, அனுபவச்செறிவு நிறைந்த பாடல்களை எழுத வழிவகுத்தன.
இளம் வயதில் அதுவும் 30 -க்கும் குறைவாகவே, இறந்த இரு கவிஞர்கள் என்னை கவர்ந்தவர்கள். ஒருவர் கீட்ஸ், இன்னொருவர் பட்டுக்கோட்டை யார்.கீட்ஸ் வரிகள் அனைத்தும் காதல் வயப்பட்டவை, பட்டுக்கோட்டை யின் வரிகள் பெரும்பாலும் பாட்டாளி வர்க்கத்திற்காக பேசியவை.
கீட்ஸ் படைப்புகள் அவரது காலத்தில் சமகால ஆங்கிலேய கவிஞர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால்,பட்டுகோட்டையாரின் பாடல்கள்
தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன-நேசிக்கப்பட்டன.
எளிய சொற்கள், ஆழமான பொருள், பாடல்களில் பொதுவுடைமை, சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை என மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
எந்தப் புலவர் பேரவையும், எந்தப் பல்கலைக் கழகமும், எந்தத் தமிழ்த் தெய்வமும் பட்டுக்கோட்டைக்கு மக்கள் கவிஞர் என்று பட்டம் சூட்டவில்லை. மக்கள் மன்றமே அவருக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை மனமார வழங்கிற்று.“தேனாறு பாயுது, செங்கதிரும் சாயுது ஆனால், மக்கள் வயிறு காயுது…” அவர் சொன்ன பொதுவுடமை வேட்கை தணியவில்லை..,
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #