திரைப்படம் தொடங்கும் போதே இது கற்பனையான கதை, இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோ எந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல என்று பொறுப்புடன் பொறுப்புத் துறப்பு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 80களில் தமிழ்நாட்டில் தீவிரமாக இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படையை அடக்க, முடக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் 1992ல் தர்மபுரியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமைகள், அதில் அதிகார மையம் எடுக்கிற முடிவுகள் ஆகியவையே படமாக விரிந்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
விடுதலைப் பகுதி 1ல் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சி குமரேசன் (சூரி) என்ற காவலாளி அவரது தார்மீக உள்ளுணர்வுக்கும், இரக்கமற்ற காவல் அமைப்புக்கும் இடையில் சிக்கியிருக்கும் கொந்தளிப்பான அவனது உலகில் நம்மை ஆழமாக ஆழ்த்துகிறது. மக்கள் படை என்ற பிரிவினைவாதக் குழுவின் தலைவனுக்கும் பெருமாளுக்கும் (விஜய் சேதுபதி) இடையிலான கருத்தியல் மோதலில் கதை அதன் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது.
கதையின் அடித்தளம் அழுத்தமானது. பதற்றத்தை நீர்த்துப்போகச் செய்யாத தொடர் நிகழ்வுகள், தடுமாற்றத்தை தராத காட்சிகளின் போக்கை கண்காணிக்கும் வேக கட்டுப்பாடுகள் நிறைந்த நெறியாள்கை. வெற்றிமாறன் மீண்டும் ஒரு முறையான, ஆழமான சூழ்நிலையை தமிழ் திரை சூழலில் உருவாக்குவதில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். முறையான ஒடுக்குமுறை மற்றும் தார்மீக சங்கடங்கள் பற்றிய அவரது சித்தரிப்பு நம் வயிற்றை பிசைய வைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
குமரேசன் பாத்திரத்தின் உள் போராட்டத்தை குறிப்பிடத்தக்க நுணுக்கத்துடன் சித்தரிக்கும் சூரி, தனது திரை வாழ்வில் இதுவரை காட்டாத நடிப்பை காட்டியிருக்கிறார்.
விடுதலை ஒன்று, சூரிக்கு களம் ஒதுக்கி கொடுத்தது. விடுதலை இரண்டு, விஜய் சேதுபதிக்கு தான் என்பது நமக்கு அப்போதே தெரிந்த ஒன்று தான்.
சேதுபதி திரை முழுவதும் தனது தேர்ந்த நடிப்பின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மக்கள் செல்வனுக்கு விருதுகள் வந்து குவியும் என்பதில் சந்தேகமில்லை.
படம் தொடங்கி ஆரம்ப 30 நிமிடங்கள் அதிரடி. உரையாடல்களும் செயல்களும் மிகவும் வலிமையானவை. எண்பதுகளில் நடந்த உண்மை சம்பவத்தின் சில கூறுகளை உணர்ந்தவர்களால், மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த தலைமுறைக்கு சற்று எளிதாக விளங்கி விடாது. ஆனால் அவர்கள் அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக இருக்கும் இந்த படைப்பு.
வெற்றிமாறன் தனது விடுதலையில், சமூகத்தில் நிலவும் வகுப்புவாதம், சுரண்டல், சாதி பிரச்சனை எல்லாவற்றையும் நுட்பமாக சொல்லி, அவர் அதை நம் முகத்தில் எறிந்து, நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்கவும், ஒவ்வொரு செயலையும் எதிர்வினையையும் கேள்விக்குள்ளாக்கவும் நம்மை அனுமதிக்கிறார்.
இந்த படைப்பு குறைவான திராவிடம், நிறைய கம்யூனிசம், நிறைவான தமிழ் தேசியம் பேசுகிறது. இந்த சித்தாத்தங்கள் பேசுகிற உரிமைக்கோரல் மற்றும் போராட்டத்திற்கான அவசிய தேவை இன்னும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.
குமரேசன் மற்றும் பெருமாள் – அவர்களின் அப்பாவித்தனம், தாங்கள் நினைத்ததைச் சரியென நம்பும் மன உறுதி, மன்னிப்புக் கேட்காத பிடிவாத குணம் இவற்றை ஒரு பாத்திரப் படைப்பாக மட்டும் பார்த்துவிட முடியாது. சமூகத்தின் மீதான அதீத அக்கறை கொண்டவர்களின் மனநிலை அது. அதை அப்பட்டமாக பதிவு செய்ததன் மூலம் படைப்பு தனித்து நிற்கிறது.
வலிமை உள்ளவனிடம் தங்களது நிலங்களை இழந்தவன், ஆதிக்க சாதிகளிடம் தங்களது குடும்ப பெண்களின் கற்பை பறிகொடுத்தவர்கள், அதிகார வர்க்கங்கள், வலிமையானவர்கள், நம்பிக்கை துரோகிகள்..,
இவர்களைப் போன்றவர்களிடம், தங்களது அடிப்படை உரிமையை இழந்தவர்களுக்காக, ஒவ்வொரு காலகட்டத்திலும், வெவ்வேறு போராட்ட அமைப்புகள் போராடியிருக்கின்றன. சமுதாய அமைப்பைப் மாற்ற முனைந்த போராளிகளை, பயங்கரவாதிகள் என்று நிகழ்கால அமைப்பு கூறினாலும், அவர்கள் ஒரு கோட்பாடுகளுக்கு உட்பட்டு மக்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறியும் வகையில், அடக்குமுறைக்கு எதிராக பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆவணம் தான் விடுதலை.
விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, கனிம வளங்களை கெடுத்து, வன வளங்களை சுரண்டி, வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர எத்தனிக்கும் அரசுக்கு இடையூறாக எழும் போராட்டங்களை, அதிகார பலம் கொண்டு, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் எவ்வாறு கையாளும் என்பதையும், மக்கள் படையை ஒடுக்கி, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செய்யும் முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக பதிவு செய்துள்ளது விடுதலை.
படம் பார்த்து செல்லும் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்துடன் சென்றாலும், கனத்த இதயத்துடன் தான் திரையரங்கை விட்டு வெளியேறுகிறோம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋