Close
ஜனவரி 6, 2025 8:33 மணி

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று

நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறாத இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று..,

பல்லாயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியம் நம் விவசாயம் , பதினொராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்ட பாரம்பரியம் கொண்டது நம் வேளாண்மை என்பதே ஆய்வின் முடிவு. அப்பேற்பட்ட நம் பாரம்பரியத் தொடர்ச்சி அடிபட்டு இரசாயன உரங்கள் மண்ணில் கொட்டப்பட்டு மண்ணை மலடாக்கிக் கொண்டிருந்த நம்மை மீட்டெடுக்க வந்தவர் தான் அய்யா நம்மாழ்வார்.
அவர் ஒன்றும் நவீன விவசாய தொழில்நுட்பத்திற்கு எதிரானவர் அல்ல , மாறாக மரபணு மாற்றபட்ட பயிர்கள் கேடு விளைவிப்பவை என்பதை நிரூபித்தவர், பாரம்பரிய ஒட்டு ரக பயிர்களின் மூலம் நல்ல விளைச்சலை ஏற்படுத்த முடியும் என்றவர். இன்றும் என்னைப் போன்றவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராக இருக்கக் காரணமானவர் அய்யா நம்மாழ்வார் தான்.

நம்மாழ்வார் விவசாயக் குடும்பத்தில் பிறந்து இயற்கையையும், விவசாயத்தையும் ஒன்றாக நினைத்து அதை பாதுகாக்க உயிர் உள்ள வரை போராடினார். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இன்று எண்ணற்ற படித்த இளைஞர்கள் இயற்கை விவசாயம் செய்ய முன்வந்து மிகவும் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் இருந்த/காணாமல் போன எண்ணற்ற தானியங்கள், நெல் வகைகள், சிறு தானியங்கள் அவற்றின் விதைகளை நாட்டுக்கு மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வந்து வெற்றிகரமாக பயிர் சாகுபடி செய்து சாதித்து காட்டியது மட்டும் அல்லாமல் அவற்றின் பயன்களையும் மருத்துவ குணங்கள் பற்றியும் மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேப்பிலை/ வேப்பஎண்ணெய் போன்றவற்றுக்கு காப்புரிமை வாங்கி கொடுக்க முக்கிய பங்கு வகித்தார்.

பெரும்பாலான சாதனையாளர்களை விட்டு விலகி அவர்களின் சாதனைகளை மட்டும் நெருங்கி இருக்க வேண்டும். ஆனால் வாழ்நாளில் சிலரை தான் சந்திக்க வேண்டும் என்கிற ஒரு உந்துதல் இருக்கும்.., அந்த உந்துதலினால் ஒரு நாளாவது நம்மாழ்வார் என்கிற மகத்தான ஆளுமையை நேரில் சந்திக்க வேண்டும் என நான் நினைத்து நிகழாமல் போய் விட்டது..,

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top