Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

அங்கன்வாடிகளை இணைக்கும் முடிவைக் கைவிடக்கோரி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல்எ-சின்னத்துரை

அங்கன்வாடி மையங்களை இணைந்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி பல்வேறு சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழந்தைகள் வளர்ச்சியில், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்புச் செய்துவருவது அங்கன்வாடி மையங்கள். இதனை ஒன்றுடன் ஒன்று இணைத்து எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் பல அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் கர்பிணிப் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே, தமிழக அரசு அங்கன்வாடி மையங்களை இணைக்கும் முடிவைக் கைவிட  வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பு களின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.

சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ராமையன், டி.சலோமி, பி.சுசிலா, எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாநில செயலளார்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி, விச மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ச.சந்தோஷ் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. உரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  அவர் பேசியதாவது: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை எனக் கூறி இருக்கிறார். அவர் சொல்வது உண்மை என்றால் மகிழ்ச்சிதான். ஆனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அருகருகாமையில் உள்ள மையங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதுதான் எதார்தமாக உள்ளது.

பொதுவாக அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள்தான் சேர்க்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அங்கன்வாடி மையங்கள் வழங்கி வருகின்றன.

கர்ப்பிணிப் பெண்களும் பெருமளவில் இம்மைங்களின் மூலமாக பலனடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் ஒரு பகுதியில் இன்னொரு பகுதிக்கு குழந்தைகளை அனுப்புவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள்களும், சமூகக் சிக்கல்களும் உள்ளன.

எனவே, இருக்கின்ற அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்தி குழந்தைகளை மையங்களுக்கு வரவழைப்பதற் கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களையே சிதைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு இறங்கியுள்ள சூழலில் தமிழ்நாடு அரசும் அதற்கு இறையாகாமல், அங்கன்வாடி மையங்களையும், அதன் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார் எம்எல்ஏ- சின்னதுரை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top