Close
நவம்பர் 22, 2024 4:36 காலை

பத்திரப்பதிவு கட்டணம் பன்மடங்கு உயர்வு… தமாகா கண்டனம்

தமிழ்நாடு

தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் எம்.யுவராஜா

பத்திரப்பதிவு கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்திற்கு விடியலை தருவோம் என்றவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை உயர்த்தி தமிழ்நாட்டு மக்களை வாழ முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்க வைத்துள்ளது திமுக அரசு.

அதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரப்பதிவு கட்டணத் தையும் பன்மடங்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக் குரிய நடவடிக்கை.

ரசீது ஆவணத்துக்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும் உயர்த்தியுள்ளது ஏற்கவே முடியாத ஒன்றாகும்.

தமிழக மக்கள் காணாத துயரத்தை கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சி காலத்தில் அனுபவித்தார்கள். தற்பொழுது விடியலை தராத முதல்வர் ஸ்டாலினின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் பல மடங்கு துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.

மின்கட்டணத்தை  உயர்த்தி  பாதிக்கும் மேற்பட்ட தொழிற்சாலை களை மூட வைத்து இன்னும் மீதி இருக்கும் தொழிற்சாலைகளையும் மூடப் போகிறார்கள். ஏற்கெனவே சொத்துவரி என்ற பெயரில் மக்களை பெரும் துயரத்துக்கு ஆளாக்கினீர்கள்.

உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர்  கர்நாடகாவில் மேக்கே தாட்டுவில்   அணை கட்டியே தீருவோம் என்று அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு பெயரளவிற்கு கூட தனது கண்டனத்தை வெளியிட மறுக்கிறது விடியா அரசு.

தற்போது வரலாறு காணாத விலைவாசி உயர்வு என்று வாழவே முடியாத நிலையில் தமிழக மக்களை தள்ளி உள்ளது. சினிமாத்துறை, கட்டுமானத்துறை, சாராயத் துறை, உள்பட அனைத்தின் அதிபதிகளும் நீங்கள் தானே? ஏழைகள் ஏழையாகிக் கொண்டே போவதும், திமுகவினர் பெரும் பணக்காரர்களாக மாறிக் கொண்டே போவதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

திமுக அரசு தனிநபர் சொத்துகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சாதாரண ஏழை, எளிய மக்கள் பதிவு கட்டணத்திற்கு பயந்து கொண்டு தான் பாகப்பிரிவினை பத்திரம், தானசெட்டில்மெண்ட், உயில் போன்றவற்றை எழுதி வைக்கிறார்கள்.

அதற்கும் கிரய கட்டணமே நிர்ணயத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொத்து சம்பந்தப்பட்ட எந்த ஆவண பதிவும் செய்ய இயலாது. ஏற்கெனவே தமிழகத்தில் சொத்துகளை இனிமேல் திமுகவினர் மட்டும் தான் வாங்கவோ விற்கவோ முடியும். கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் அதற்கு தேவையான பணத்தை அவர்கள் சம்பாதித்து செய்து வைத்துள்ளார்கள்.

திமுக அரசு பத்திரப்பதிவு உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் இனிமேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொத்துகளை வாங்கவோ விற்கவோ கூடாது என்று சட்டம் இயற்றிவிடலாம்.

வரி உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களின் தலையில் இடியை இறக்குவது தான் விடியலை தருவதா?எனவே, திமுக அரசு ஏழை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மிகக்கடுமையாக உயர்த்தியுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top