தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தோழமை சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் வழக்கறிஞர் ஆர். பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாநகரத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சி மூலம் நேரடியாக நியமனம் செய்ய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 311 தூய்மை பணியாளர்களையும் நிரந்தர பணியாளர்களாக தொகுப்பூத்தியத்தில் பணியமர்த்த வேண்டும்.
ஒப்பந்த முறை மற்றும் தனியார் துறைகள் மூலம் துப்புரவு பணிக்கு ஆட்களை எடுக்கக்கூடாது. நிரந்தர பணிகளில் ஆட்கள் நியமிக்க தடை செய்யும் அரசாணை 139, 152 ,10 ,40 உள்ளிட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
தினக்கூலி தற்போது வழங்கப்படும் 550 ரூபாயிலிருந்து 650 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து மாநகராட்சி ஊழியர்களுக்கும் ஈ பி எப் ஓய்வூதியம், இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்குதல், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் , சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
துப்புரவு பணிகளில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நடவடிக்கைகளை கண்காணிக்க, பாதுகாப்பு அளித்திட விசாகா கமிட்டியை அமைத்திட வேண்டும்.
தஞ்சாவூரின் 51 மாநகராட்சி வார்டுகளில் பணி புரியும் இடங்களில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை, குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க தஞ்சை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழ்நாடு அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,. மாவட்ட செயலாளர் தேவா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ஆர்.பிரபாகர், துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ப.இராஜேஸ்வரன், மகளிர் அணி செயலாளர் மற்றும் 36 -ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணுக்கினியாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் கோ.ஜெய்சங்கர்.
மாநகர செயலாளர் கே.தமிழ் முதல்வன், ஆதித்தமிழர் பேரவை இளைஞர் அமைப்புச் செயலாளர் வ.பிரேம்குமார்நிவாஸ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த தலைவர் வீரன். வெற்றிவேந்தன் நிறைவுரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இதில் தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ஆனந்தராஜ், உஷாராணி, முனியம்மாள்,ரவி, பாலசுப்பிரமணியம், லெட்சுமி.ராஜராஜன், ஜெயந்தி ,மகாலட்சுமி, வாசுகி,இளவரசன், செல்வி, காமாட்சி, வெங்கடேசன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.