Close
செப்டம்பர் 19, 2024 6:55 மணி

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொது வாழ்க்கையில் மிளிர முடியாது

புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை முன்னாள் தாலுகா செயலாளருமான தோழர் லெனின் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொதுவாழ்க்கையில் மிளிர முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்  கே.பாலகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை முன்னாள் தாலுகா செயலாளருமான தோழர் லெனினின் 28-ஆம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

தோழர் லெனினின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்து, 40 அடி கொடிமரத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து அவர் பேசியதாவது:

பொதுவாக குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் ஐந்து, ஆறு ஆண்டுகள் அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும். பின்னர் அது படிப்படியாக மறைந்து விடும். தோழர் லெனினின் 28 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நாம் சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

புதுக்கோட்டை
தோழர் லெனின் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தும், 40 அடி கொடிமரத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்

பொதுவாழ்க்கையில் சிறப்பாக பங்களிப்பைச் செய்த தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றைக்கும் மறக்காது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே உதாரணம்.

எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக லெனின் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளுக்காக தோழர் லெனின் ஆற்றிய மகத்தான பங்களிப்பை இங்கே தியாகு விளக்கிப் பேசினார்.

சிறைச்சாலைதான் அவரை சிறந்த கம்யூனிட்டாக மாற்றியது. அவரது விடுதலைக்கு நம்முடைய தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியன், ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோர் பெரு முயற்சி எடுத்தனர்.

15 ஆண்டுகள் கழித்து விடுதலையான அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் பல குழுக்கள் இயங்கிய அந்தக் காலகட்டத்தில் சிபிஎம்தான் சரியான கட்சி என முடிவெடுத்து எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் பணியாற்றினார். இந்தப் பகுதியில் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி மகத்தான மக்கள் தலைவராக உயர்ந்தார்.

இந்த மண்ணுக்காக, மக்களுக்காக கம்யூனிட்டுகள் சிந்தியிருக்கின்ற ரத்தமும், வியர்வையும் கணக்கில்லாதது. ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோழர்கள் தன்னுடைய உழைப்பை, உதிரத்தை இந்த மண்ணுக்கு உரமாக்கி இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் ஊழியர்களின் தியாத்திற்கு சற்றும் குறையாதது அவர்களது குடும்பத்தினரின் பங்கு. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொதுவாழ்க்கையில் மிளிர முடியாது. அந்த வகையில் இங்கே வந்திருக்கும் தோழர் லெனினின் துணைவியார் அஞ்சலை அம்மாளையும், அவர்களின் குடும்பத்தினரையும் மனதாரா பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

புதுக்கோட்டை

தோழர் லெனின் வாழ்ந்த காலத்தைவிட நாடு பல சிக்கல் நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்துத்துவ அடிப்படைவாதம் நாட்டுமக்களை பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறது.

இத்தகைய சூழலில் தோழர் லெனினின் வாழ்க்கை நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இங்கே சிற்பான முறையில் அவரது நினைவிடும், கட்சி கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அவரது பெயரால் கந்தர்வகோட்டை கட்சி அலுவலகம் திறக்கப்படும் என்ற செய்தியை நமது சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்திருக்கிறார். இது இந்தப் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்  கே.பாலகிருஷ்ணன்.

நிகழ்ச்சிக்கு கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கல்வெட்டைத் திறந்து வைத்து கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் உரையாற்றினர்.

தமிழ்தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னையா பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் ஆகியோர் புகழுரை நிகழ்த்தினர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்மும், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியகழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, கே.தங்கவேல், எஸ்.பாலசுப்பிரம ணியன், டி.சலோமி, ஒன்றியச் செயலாளர்கள் எம்.வீரமுத்து, எஸ்.கலைச்செல்வன், டி.லெட்சாதிபதி, எம்.ஜோஷி, ஆர்.சக்திவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top