Close
ஜூலை 7, 2024 11:17 காலை

திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை

திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நடத்திய போராட்டத்தில் பேசுகிறார், விவசாய தொழிலாள் சங்க மாநிலச்செயலர் எஸ். சங்கர்

தலித் மக்களுக்கு வழங்கிய பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவு  செய்ய வலியுறுத்தி திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் வாசுகிபுரம் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட மனைப்பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் (போக்குவரத்து) பதிவு  செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் உள்ள ராயவரம் வாசுகிபுரம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் 42 பேருக்கு 1995 -ஆம் ஆண்டு அரசால் வீட்டு மனைப்பட்டா வழங்கப் பட்டது. இந்த மனைப்பாட்டா இதுநாள் வருவாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தொடர்சியாக அதிகாரிக ளை சந்தித்து முறையிட்டும் இதுநாள் வரை எந்த நடவடிக் கையும் இல்லை.

இதனைத் தொடர்ந்து மேற்படி 42 பேருக்கு வழங்கப்பட்ட மனைப்பாட்டாக்களை உடனடியாக வருவாய்க் கணக்கில் போக்குவரத்து செய்ய வேண்டும். அப்பகுதியில் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இல்லாத ஏழை பட்டியலின மக்கள் 42 குடும்பங்களுக்கும் தாட்கோ மூலம் இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை(செப்.30)  முன்னிட்டு நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச்செயலர் எஸ்.சங்கர், சிஐடியு மாநிலச் செயலளார் ஏ.ஸ்ரீதர், விவசாய சங்க மாவட்டத்தலைவர் எஸ்.பொன்னுசாமி, விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் சங்க நிர்வாகிகள் எம்.அசோகன், கவிபாலா, பி.சுசிலா, வே.வீரையா, எம்.ஏ.ரகுமான், உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து வட்டாட்சியர் புவியரசன், பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகள் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கத் தலைவர்களிடம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top