Close
நவம்பர் 21, 2024 8:06 மணி

உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் வரும்: ஓபிஎஸ் திட்டவட்டம்

புதுக்கோட்டை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை வழங்கப்பட்டது அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது என்று தீர்ப்பு வரவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று‌  திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்  அளித்த பேட்டி: நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாஜக கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் முழுமையான பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு  பாஜக அரசு வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

சி ஏ ஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலி யான எடப்பாடி பழனிசாமி இடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாஜகவும் நாங்களும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றோம். அந்த கூட்டணி முறியவில்லை.

பாஜகவுடன் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் முதலில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கத் தான் தெரியப்படுத்தப்படும். தமிழ்நாடு வரும் பிரதமருடன் மேடை ஏறுவதற்கான வாய்ப்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே நாங்கள் சொல்லியபடி, நானும் டிடிவி. தினகரனும் இணைந்து தான் பணியாற்றிக் கொண்டுள் ளோம். சசிகலா இணைந்து பணி செய்வாரா என்பதை அவரிடன் தான் கேட்க வேண்டும். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறும் ஜெயக்குமார் பெரிய அறிவாளி ஒன்றுமில்லை.

ஒரு மனிதருக்கோ அல்லது அரசுக்கோ நன்றி என்பது இருக்க வேண்டும். நான்கரை ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் பரிபூரண ஆதரவோடு  எடப்பாடி பழனிச்சாமி அணி ஆட்சியில் இருந்தது அனைவருக்கும் தெரியும். நம்பிக்கை துரோகம்,  துரோகம் இதற்கெல்லாம் அடையாளம் எடப்பாடி பழனிச்சாமிதான்.

தமிழ்நாடு முதலமைச்சர் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணம் செல்வதாக அவர் பேட்டி கொடுத்து விட்டு சென்றுள்ளார் அவர் திரும்பி வந்தவுடன் எவ்வளவு முதலீடுகளை தமிழ்நாட்டில் நலத்திட்டங்களுக்கு தொழில் முதலீட்டுகளுக்கு கொண்டு வந்துள்ளார் என்பதை அறிவித்தபிறகுதான்  பதில் சொல்ல முடியும்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றதாக இதுவரை தெரியவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தவுடன் அந்த திட்டத்திற்கான முழு பயனும் ஒவ்வொருவருடைய கரங்களிலும் சென்று சேர்வதை அவர் உறுதி செய்தார். ஆனால் தற்பொழுது திட்டம் அறிவிக்கும் போது ஒன்று கூறுகிறார்கள் நடைமுறைப்படுத்தும் பொழுது கூறியதை  குறைத்து விடுவதால். அவர்கள் அறிவிக்கும் திட்டம் 10%  மக்களை சென்றடையவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்தை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.2016- ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மகத்தான வெற்றியைப் பெற்று மீண்டும் ஆளும் கட்சியாக வந்து  நல்லாட்சி செய்தார்.

அந்த வெற்றியின் மூலம் தான் ஓபிஎஸ் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக முடிந்தது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று சொல்லி தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. அது ஜெயலலிதா பெற்ற வெற்றி என்பதை நன்றாக அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா யார் யாருக்கு  நல்லதை கொடுத்தாரோ அவருக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். முதலமைச்சராக இவரை சசிகலா தான் நியமித்தார். அவருக்கு என்ன நன்றிக்கடன் செலுத்தினார் என்று உங்களுக்கு தெரியுமா? பதவி கொடுத்த சசிகலாவையே கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தார் அதுதான் அவர் செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.

என்றைக்குமே நான் பொறுமையோடு தான் எனது பணிகளை யும் கடமைகளையும் செய்வேன். பொறுமையை இழக்க மாட்டேன். சொல்ல வேண்டிய கருத்துகளை அழுத்தமாக சொல்லுவேன் அதில் உண்மை தன்மை இருக்கும் ஏனென்றால் ஜெயலலிதா சொன்னதைத்தான் நான் செய்தேனே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

நாங்கள் அனைவருமே தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று தான் கூறுகின்றோம். அனைவ ரின் எதிர்பார்ப்பும் அதுதான் ஆனால் உலகத்திலேயே சேரக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்.

அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்னை துரோகத்தின் உச்சகட்டமாக என்னை வெளியேற்றினார்கள் அது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜனநாயக படுகொலை செய்தார்கள் நான் என்ன தவறு செய்தேன் என்பதை பகிரங்கமாக சொல்லி அதை நிரூபிக்க வேண்டும். திமுக வுக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்று சொல்பவர்கள் முட்டாள் என்றார் ஓ.பன்னீர்செல்வம்..

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையில் இருபுறமும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. திருமணம் நடத்தி வைக்க மேடை ஏறிய ஓபிஎஸ் -க்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் ராட்சத மாலையும் அதேபோல் வெள்ளி வாளும் பரிசாக வழங்கினர்.

இதில், நிர்வாகிகள் ரா.ராஜசேகரன், செந்தில்குமார், மருதுஅழகுராஜ், திரைப்பட இயக்குநர் பசங்க பாண்டிராஜ்  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top