மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கை மண்ணில் சிலை நிறுவக்கோரி தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் முன்னெடுக்கின்ற கையெழுத்து இயக்கத்தின் சார்பில் நடத்தப்ப முகாமில், புதுக்கோட்டையில் உள்ள பொதுமக்களும், மாணவர்களும் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கையெழுத்து இட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் தங்களது இரத்தத்தால் கையெழுத்திட்டு நிகழ்வை தொடக்கி வைத்தார்கள்.
மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைப்போம். மருது சகோதரர்களின் மண்ணில் வீரம் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 அன்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் பிறப்பித்த போர்ப் பிரகடனம், என்றும் அவர்கள் வீரத்தைப் பறைசாற்றும். காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி என ஆன்மீகத் திருப்பணிகளில் சிறந்து விளங்கியவர்கள்.
தங்கள் உயிரையும் துச்சமென மதித்துத் தியாகம் செய்து, தேச விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் வீரத்தையும் புகழையும் போற்றுவோம்.